இந்தியாவுக்கு விண்டீஸ் பதிலடி: ஷிவம் துபே அரைசதம் வீண்

பதிவு செய்த நாள் : 09 டிசம்பர் 2019 01:36


திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் இந்தியாவுக்கு வெஸ்ட்இண்டீஸ் பதிலடி கொடுத்தது. இந்தியா நிர்ணயித்த 171 ரன்னை சேஸ் செய்த வெஸ்ட்ண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிம்மன்ஸ் (67*) அரைசதம் அடித்தார்.

போலார்டு தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி மூன்று ‘டுவென்டி–20’, 3 ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 1–0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் போலார்டு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை. மாறாக, வெஸ்ட்இண்டீஸ அணியில் ராம்தின் இடத்தில் நிகோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணிக்கு ரோகித், ராகுல் இருவரும் துவக்கம் தந்தனர். பியரே ‘சுழலில்’ ராகுல் (11) சிக்கினார். ராகுல் ஆட்டமிழந்த நிலையில், பேட்டிங் வரிசையில் மாற்றம் வந்தது. மூனறாவது வீரராக ஷிவம் துபே களமிறக்கப்பட்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. துவக்கத்தில் சற்று பொறுமை காத்த துபே பின்னர் அதிரடியில் இறங்க அரங்கமே அதிர்ந்தது. அதே நேரம் இம்முறையும் ரோகித் (15) கைகொடுக்கவில்லை. பின் ஷிவம் துபேயுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார், இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் எடுத்து வந்தனர்.
எதிரணி பந்து வீச்சை நாலா புறமும் பறக்க விட்ட ஷிவம் துபே, 27 பந்தில் அரைசதம் அடிக்க ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 11வது ஓவரின் முடிவில் இந்தியா 100 ரன் எடுத்தது. சிறப்பாக விளையாடி வந்த ஷிவம் துபே 54 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த நிலையில் வால்ஷ் பந்தில் வெளியேறினார். முக்கிய கட்டத்தில் கோஹ்லி (19), ஸ்ரேயாஸ் ஐயர் (10) கைகொடுக்கவில்லை. ஒருமுனையில் ரிஷாப் பன்ட் அதிரடியாக விளையாடி வந்தார். அதே நேரம் கடைசி கட்ட ஓவர்களை வில்லியம்சன், கார்ட்ரல் இருவரும் சிறப்பாக வீசி இந்திய ரன் ரேட்டை கட்டுப்படுத்தினர். இதனால் ஜடேஜா (9), வாஷிங்டன் சுந்தர் (0) பெவிலியன் திரும்பினர். முடிவில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. ரிஷாப் பன்ட் 33 (22 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), தீபக் சகார் (1) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் தரப்பில் வில்லியம்ஸ், வால்ஷ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய வெஸ்ட்இணடீஸ் அணிக்கு சிம்மன்ஸ், எவின் லீவிஸ் இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர். குறிப்பாக எவின் லீவிஸ் ‘ருத்ர தாண்டவம்’ ஆடினார். இவருக்கு சிம்மன்ஸ் கம்பெனி கொடுக்க ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 73 ரன் (9.3 ஓவர்) சேர்த்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் பந்தில் எவின் லீவிஸ் ஆட்டமிழந்தார். இவர் 40 ரன் (35 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அடுத்து ஹெட்மயர் களம் வந்தார், இவர் இந்திய பந்து வீச்சை விளாசினார். 13.1 ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் 100 ரன் கடந்தது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சிம்மன்ஸ் 38 பந்தில் அரைசதம் அடித்தார். அதே நேரம் 14 பந்துகளை மட்டுமே சந்தித்த ஹெட்மயர் 3 சிக்சர் உட்பட 24 ரன் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து எளதான வெற்றியை பதிவு செய்தது. சிம்மன்ஸ் 67 (45 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), நிகோலஸ் பூரன் 38 (18 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா தலா 1 விக்கெட் சாய்த்தனர். ஆட்டநாயகனாக சிம்மன்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
வெஸ்ட்இண்டீசின் இந்த வெற்றியால் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடர் 1–1 என சமநிலை ஆனது. இந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பையில் வரும் 11ம் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.