கோஹ்லியிடம் வீழ்ந்தது விண்டீஸ்

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2019 01:13


ஐதராபாத்:

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி&20’ போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி 50 பந்தில் 94 ரன் விளாச 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

போலார்டு தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி மூன்று ‘டுவென்டி&20’, 3 ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் டுவென்டி&20’ தொடர் நடக்கிறது. இதன் முதலாவது போட்டி ஐதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச அரங்கில் நேற்று இரவு நடந்தது. இதில், ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி, மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு சிம்மன்ஸ், எவின் லீவிஸ் இருவரும் துவக்கம் தந்தனர். முதல் ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரில் எவின் லீவிஸ் ஓரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இதையடுத்து இந்த ஓவரில் மொத்தம் 13 ரன்கள் கிடைத்தது. அதே நேரம் இரண்டாவது ஓவரை வீசிய தீபக் சகார் முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இவரது பந்தில் சிம்மன்ஸ் (2) ஆட்டமிழந்தார். பின் லீவிசுடன் கிங் இணைந்தார். இந்த பந்து வீச்சை துவக்கம் முதலே லீவிஸ் விளாசி வந்தார். இவருடன் கிங் இணைந்து கொள்ள ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது. மீண்டும் பந்து வீச வந்த வாஷிங்டன் சுந்தர் இம்முறை எவின் லீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். எவின் லீவிஸ் (40) அரைசத வாய்ப்பை தவறவிட்டார். அடுத்து ஹெட்மயர் களம் வந்தார்.

வெஸ்ட்இண்டீஸ் அணி 9.5 ஓவரில் 100 ரன் கடந்த போது இப்போட்டியில் பெரிய ஸ்கோரை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. தவிர, விண்டீஸ் அணி துவக்கம் முதலே ஒரு ஓவருக்கு 10 ரன் எடுத்து வந்தது, இந்த நிலையில், ஜடேஜா திருப்புமுனை தந்தார். இவரது ‘சுழலில்’ கிங் (31) சிக்கினார். பின் ஹெட்மயருடன் கேப்டன் போலார்டு இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அசத்தினார். இந்திய பந்து வீச்சை விளாசிய ஹெட்மயர் 35 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்த நிலையில், சகால் பந்தில் ஹெட்மய்ர் (56) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய சகால் இம்முறை போலார்டை (37) கிளீன் போல்டாக்கினார். கடைசி கட்டத்தில் ஹோல்டர் (24), ராம்தின் (11) அவுட்டாகாமல் கைகொடுக்க வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் சகால் அதிகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரேகித் சர்மா 98) கைகொடுக்கவில்லை. பின் ராகுலுடன் கேப்டன் விராத் கோஹ்லி இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். 11.4 ஓவரில் இந்தியா 100 ரன் கடந்தது. 37 பந்தில் ராகுலல் அரைசதம் அடிக்க, மறுமுனையில் கோஹ்லி 35 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த நிலையில், பியரே பந்தில் ராகுல் (62) ஆட்டமிழந்தார். கார்ட்ரல் வேகத்தீல் ரிஷாபப் பன்ட் (18) சரிந்தார். ஒரமுனையில் கோஹ்லி போராட 3 ஓவரில் 26 ரன் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் ஸ்ரேயஸ் ஐயர் (4) ஏமாற்றினார்.

இரண்டு ஓவரில் 15 ரன் தேவைப்பட வில்லியம்சன் பந்து வீச வந்தார். முதல் பந்தில் 2 ரன் எடுத்த கோஹ்லி, அடுத்த பந்தை சிக்சருக்கு விளாச அரங்கமே அதிர்ந்தது. 3 பந்தில் மீண்டும் 2 ரன் எடுத்த கோஹ்லி, 4வது பந்தில் சிக்சர் அடிக்க இந்தியா 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கோஹ்லி 94 (50 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) ஷிவம் துபே (0) அவுட்டாகாமல் இருந்தனர். ‘டுவென்டி&20’ போட்டியில் கோஹ்லியின் அதிகபட்ச ரன் இதுவாகும். விண்டீஸ் தரப்பில் பியரே 2 விக்கெட் சாய்த்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோஹ்லி ஆட்டநாகயனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா 1&0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடக்க உள்ளது.