ஆன்லைன் கடன் அளவை ரூ.50 லட்சமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி உத்தரவு

பதிவு செய்த நாள் : 05 டிசம்பர் 2019 17:59

மும்பை

ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் கடன் அளவு 10 லட்சம் ரூபாயாக உள்ளது. இதனை 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதுபோல பெறப்படும் கடன் தொகையின் அளவும் ரூபாய் 10 லட்சத்தை தாண்டக்கூடாது என ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு வழங்கியிருந்தது.

ஆன்லைனில் வழங்கப்படும் கடன் மற்றும் பெறப்படும் கடன் அளவுகளை 5 மடங்காக இந்திய ரிசர்வ் வங்கி வியாழனன்று உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சில நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக கடன் வழங்குவதற்கான இணையதள அமைப்புகளை நடத்தி வருகின்றனர்

இந்த அமைப்புகளிடம் தாங்கள் கடன் வழங்க தயார் என்று தனியார் அல்லது நிறுவனங்கள் உறுதி அளிக்க வேண்டும். அந்த நிதி நிறுவனங்களில் கடன் வழங்கும் திறனை பரிசீலித்து அதற்கு ஏற்ப கடன்பெற விருப்பம் தெரிவித்துள்ள தனியார் மற்றும் நிறுவனங்களுடன் கடனுக்கான ஏற்பாடுகளை ஆன்லைன் நிறுவனங்கள் செய்து கொடுக்கின்றன.

இதற்கென. தனியாக கட்டணத்தை அவை இரு தரப்பிலிருந்தும் பெற்றுக் கொள்ளுகின்றன.

வங்கிகள் போல இத்தகைய ஆன்லைன் கடன் நிறுவனங்கள் பெரிய அளவில் இயங்காத காரணத்தினாலும் அந்நிறுவனங்களுக்கான நடைமுறைச் செலவுகள் மிகக் குறைவாக இருப்பதாலும் கடனுக்கான செலவு மிகக்குறைவாக உள்ளது. அதனால் கடன் பெறுவோர் குறைந்த வட்டியில் கடன் பெறமுடியும்.

கடன் வழங்குவோர் சிரமமின்றி தகுந்த கடன் பெற விரும்புவோரைக் கண்டறிந்து கடன் வழங்க முடியும்.

மிகக் கூடுதலான தொகை தவிர சிறிய அளவிலான தொகைகள் தனிப்பட்ட கடன்களாக சுய நம்பிக்கை அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

பெரும் தொகைக்கு பிணைய சொத்துக்கள் ஆன்லைன் கடன் நிறுவனங்களால் கோரப்படுகின்றன. நகை, கட்டிடங்கள், அசையாச் சொத்துக்கள், பிணைய பொருள்களாக கோரிப் பெறப்படுகின்றன.