ஆன்மிக கோயில்: தீராத பிணிகள் நீக்கும் நாறும்பூநாதர்!

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2019

தல வர­லாறு : ஒரு சம­யம் சிவ­னி­டம் தேவாதி தேவர்­கள் அனை­வ­ரும் காசிக்கு ஒப்­பான தலத்­தைக் காட்­டு­மாறு வேண்­டி­னர். அவர்­க­ளின் வேண்­டு­தலை ஏற்ற சிவன், பிரம்­ம­தண்­டத்தை தரை­யில் இடும்­ப­டிக் கூறி­னார். அதன்­படி, அவர்­கள் பிரம்­ம­தண்­டத்தை இடவே, அது தாமி­ர­ப­ரணி ஆற்றை அடைந்து திருப்­பு­டை­ம­ரு­தூ­ரில் தற்­போது தலம் வீற்­றி­ருக்­கும் பகு­திக்கு அருகே கரை­யில் ஏறி நின்­றது. ‘பிரம்­ம­தண்­டம்’ நின்ற இடமே காசிக்கு ஒப்­பான தலம் என சிவன் கூறவே, இவ்­வி­டத்­திற்கு வந்த தேவர்­கள் பிரம்­ம­தண்­டத்தை பூஜை செய்து சிவ­னது அரு­ளைப்­பெற்­ற­னர்.

பிற்­கா­லத்­தில், இப்­ப­கு­தியை வீர­மார்த்­தாண்ட மன்­னர் ஆட்சி செய்து வந்த போது மரு­த­ம­ரங்­கள் நிறைந்த வன­மாக இருந்த இங்கு வேட்­டைக்கு வந்­தார். மான் ஒன்­றினை கண்ட மன்­னன் அதனை தனது அம்­பி­னால் வீழ்த்­தி­னார். அம்­பி­னால் காயம்­பட்ட மான் அங்­கி­ருந்து தப்பி ஓடி ஓர் மரு­த­ம­ரத்­தின் பொந்­திற்­குள் சென்று மறைந்­தது. மானை மீட்க அம்­ம­ரு­த­ம­ரத்தை வெட்­டும்­படி மன்­னர் உத்­த­ர­விட்­டார். அதன்­படி, சேவ­கர்­கள் கோட­ரி­யால் மரத்தை வெட்­டவே அவ்­வி­டத்­தி­லி­ருந்து ரத்­தம் பீறிட்­டது. பின், மன்­னர் அவ்­வி­டத்­தில் பார்த்­த­போது தலை­யில் கோட­ரி­யால் வெட்­டுப்­பட்ட நிலை­யில் சிவ­லிங்­கம் இருந்­தது. மான் வடி­வில் வந்து அருள்­பு­ரிந்­தது சிவன்­தான் என அச­ரீரி கேட்­கப்­பெற்ற மன்­னர், அவ­ரது உத்­த­ர­வுப்­படி இவ்­வி­டத்­தில் ஆல­யம் எழுப்பி வழி­பட்­டார்.

அதி­ச­யத்­தின் அடிப்­ப­டை­யில்: இங்கு சிவன் சாய்­வான சுயம்பு  மூர்த்­தி­யாக அருள்­பா­லிக்­கி­றார். இத்­த­லத்­தில் அருள்­பு­ரி­யும் சிவ­பெ­ரு­மான், தலை­யில் வெட்­டுப்­பட்ட கோட­ரி­யின் தடம், மார்­பில், மானின் மீது பாய்ந்த அம்பு பட்ட தடத்­து­டன் காட்சி தரு­கி­றார்.

தல­ பெ­ருமை: வியா­ழ­ப­க­வானை தனது குரு­வாக ஏற்­றி­ருந்த இந்­தி­ரன், அவர் தன்னை மதிக்­கா­மல் இருந்­த­தால் அவரை விடு­வித்த விஸ்­வ­ரூ­பன் எனும் அசு­ரனை தனது குரு­வாக ஏற்­றுக்­கொண்­டான். காலப்­போக்­கில் அவன் தேவர்­க­ளின் நலனை கருத்­தில் கொள்­ளா­மல், அசு­ரர்­கள் சிறக்க யாகம் நடத்­து­வதை அறிந்து கொண்ட இந்­தி­ரன், கோபங்­கொண்டு அவரை கழுத்தை அறுத்து கொலை செய்­தான். இத­னால் இந்­தி­ர­னுக்கு பிரம்­ம­ஹத்தி தோஷம் பீடித்­தது. தனது தோஷம் நீங்க இந்­தி­ரன், இந்­தி­ரா­ணி­யு­டன் இங்கு வந்து தாமி­ர­ப­ரணி ஆற்­றின் கரை­யில் சுரேந்­தி­ர­மோட்ச தீர்த்­தத்­தில் நீராடி தவம் செய்து சிவனை வணங்கி தனது தோஷம் நீங்­கப்­பெற்­றான்.

சாய்ந்­த­ நி­லை­யில் சிவ­லிங்­கம் : சிவ­பக்­த­ரான கரு­வூர் சித்­தர் இத்­த­லத்­தில் அருள்­பு­ரி­யும் சிவனை தரி­சிக்க வந்­தார். அவர் தாமி­ர­ப­ர­ணி­யின் வட­ க­ரைக்கு வந்­த­போது, ஆற்­றில் பெரும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது. இத­னால், ஆற்­றைக்­க­டக்க முடி­யாத அவர், அக்­க­ரை­யில் இருந்து கொண்டே தென்­க­ரை­யில் மலர்­கள் பூத்­துக்­கு­லுங்­கிய மரு­த­ ம­ரங்­கள் நிறைந்த வனத்­தின் மையத்­தில் வீற்­றி­ருந்த சிவ­பெ­ரு­மானை நோக்­கி­ நா­றும் பூவின் நடுவே நிற்­ப­வனே நினை தரி­சிக்க எனக்கு அருள்­பு­ரி­வாயோ’ என மன­மு­ருகி வேண்டி பாடி­னார். அவ­ரது பாட­லில் மயங்­கிய சிவன், தனது இடச்­செ­வி­யில் கை வைத்து ஒரு­பு­றம் சாய்­வாக திரும்பி, ரசித்து கேட்­டார். பின்பு தன்னை நினைத்து ஆற்­றைக்­க­டக்­கும்படி கரு­வூர் சித்­த­ரி­டம் சிவன் கூறி­டவே, அதன்­படி ஆற்­றைக் கடந்த கரு­வூ­ரார் அவரை வணங்கி அருள் பெற்­றார்.

சுவா­மிக்கு வலப்­பு­றம் தனிச்­சன்­ன­தி­ யில் வீற்­றி­ருந்து அருள்­பா­லிக்­கும் கோம­தி­யம்­பாள், கோமாள் மலை­யின் கோமதி நதி­யில் இருக்­கி­றாள் என அச­ரீரி கேட்­கப்­பெற்று அதன்­படி அந்­ந­தி­யில் இருந்து எடுக்­கப்­பட்டு பிர­திஷ்டை செய்­யப்பட்­ட­வ­ளாக ருத்­ராட்சை மேனியை உடை­ய­வ­ளாக பொலி­வுற அருட்­காட்சி தரு­கி­றாள். சுவா­மிக்கு முன்­வ­லப்­பு­றத்­தில் பிரம்­ம­தண்­டம் தனியே பிர­திஷ்டை செய்­யப்­பட்­டுள்­ளது.

பிரார்த்­தனை : திரு­ம­ணத்­தடை, புத்­தி­ர­தோ­ஷம், தீராத பிணி­கள், குடும்ப கஷ்­டங்­கள், துன்­பங்­கள் நீங்­கி­ட­வும், குடும்ப ஐஸ்­வர்­யம் பெற­வும், கல்வி, கேள்­வி­க­ளில் சிறக்­க­வும், வியா­பா­ரம் விருத்­தி­ய­டை­ய­வும் இங்கு வேண்­டிக்­கொள்­ள­லாம்.

நேர்த்­திக்­க­டன்: வேண்­டிக்­கொண்ட செயல்­கள் நிறை­வே­றிட சுவா­மிக்கு பட்டு வஸ்­தி­ரங்­கள் சாத்தி சிறப்பு அபி­ஷே­கம் மற்­றும் ஆரா­த­னை­கள் செய்­ய­லாம். அம்­பா­ளுக்கு புடவை சாத்தி திருக்­கல்­யா­ணம், வளை­யல்­கள் போட்டு, தொட்­டில் கட்டி வளை­காப்பு மற்­றும் படி­ பா­ய­சம் படைத்­தும் நேர்த்­திக்­க­டன்­கள் நிறை­வேற்­ற­லாம்.

திரு­விழா: தைப்­பூ­சம் 10 நாட்­கள், ஆனி உத்­தி­ரம், ஆடிப்­பூ­ரம், விநா­ய­கர் சதுர்த்தி, நவ­ராத்­திரி, திருக்­கார்த்­திகை, மகா­சி­வ­ராத்­திரி, கந்­த­சஷ்டி, பங்­குனி உத்­தி­ரம்.

திறக்­கும் நேரம்: காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை   4 மணி முதல் இரவு  8 மணி வரை.

முக­வரி: நாறும்­பூ­நாத சுவாமி திருக்­கோ­யில், திருப்­பு­டை­ம­ரு­தூர் - 627 426, திரு­நெல்­வேலி மாவட்­டம்.