மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 20

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2019

திருமணம் முடிந்து பகல் பன்னிரண்டு மணியளவிலேயே கல்யாணச் சாப்பாடு முடிந்து, வாலியும் மனைவியும் பின் சீட்டில் அமர்ந்திருக்க கோபி வண்டியை ஓட்டிக்கொண்டு சென்னைக்கு வந்தார். மர்மலாங்பாலத்தின் அருகே வரும்போதே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடையில் மாலைப் பத்திரிகை ஒன்றின் போஸ்டரில் ` கவிஞர் வாலி காதல் திருமணம்’ என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. யாருக்கும் தெரியாமல் நடந்த இந்த நிகழ்ச்சி எப்படி  பத்திரிகைக்கு தெரிந்தது என்று வாலி வியந்து போனார். அந்நாளில் வாலியோடு நெருக்கமாகப் பழகிக் கொண்டிருந்த பழம்பெரும் பத்திரிகையாளர் ஜாம்பவான்தான் இதற்குக் காரணம் என்று பின்னாளில் தெரிந்து கொண்டார்.

 திருமண மண்டபத்தை தேர்வு செய்யப்போகும்போதே, இத்துணை தடங்கல்கள் ஏற்படின், வாலியைத் தவிர வேறு யாரும் இது போல் விடாப்பிடியாக நின்று, விவாகத்தை முடித்திருப்பார்களா என்பது சுலபமாக சொல்ல முடியாது.  ` நாளென்ன செய்யும் ? கோளென்ன செய்யும் ? நாதன் திருவடி நம்பியிருப்போர்க்கே ‘- என்பது பக்தி பதிகம். அந்தப் பதிகத்தை அப்படியே வரிக்கு வரி ஏற்பவர் வாலி.  

வாலி ஆண்டவனிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்.  ஆனாலும், சகுனங்களிலும் ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவர்.  எந்த சகுனமும், எந்த ஜாதகமும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட அவர் குடும்ப வாழ்க்கை, எந்த சஞ்சலமும் சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்தேறியது.  

வாலி திருமணத்திற்கு முன்பு சில நிகழ்வுகள் நடந்தேறின. `படகோட்டி’ படப்பாடல்கள் ஒலிப்பதிவான பிறகும் எம்.ஜி.ஆர் வாலியை தனது ஆஸ்தான கவிஞராக ஆக்கிக் கொண்டார். அவர்,புதுப்படங்களை ஒப்புக் கொண்டவுடன், அந்த கம்பெனிக்காரர்களின் கார்கள் அடுத்த வினாடி வாலியைத் தேடி அவர் இருந்த  `கிளப் ஹவுஸ்’சிற்கு வரும்.

 நண்பர் நாகேஷ் பிரபல நகைச்சுவை நடிகராகப் பரிணமித்து, திருமணமும் செய்து கொண்டு கிளப் ஹவுஸ்சை விட்டுப் போன பிறகு, வாலி மட்டும் அங்கு ஒரு தனியறையை   வாடகைக்கு எடுத்து தங்கி கொண்டிருந்தார். ஓரளவு வசதி வாய்ப்புக்களும் அவரை வந்து சேர்ந்தும், வாலி கிளப் ஹவுஸ்சை விட்டுப் போகவில்லை.

ஒரு நாள் பிற்பகல் வேளையில் வாலி தன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர் அறைக்கதவுகள் தட்டப்பட்டன. திறந்து பார்த்தார். பிள்ளைப் பிராயத்திலிருந்து எந்த அம்மையாரின் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் வாலி பரவசப்பட்டு பிரமித்து போயிருந்தாரோ, அந்த அம்மையார் அவரைத் தேடி வந்திருந்தார்.

 ` நீங்கதானே மிஸ்டர் வாலி?’ என்றார் அந்த அம்மையார். `ஆமாம். வாங்க உட்காருங்க ‘ என்று அந்த அம்மையாரை பரிவோடு அழைத்து, தன் அறைக்கு இருந்த நாற்காலியில் அமரவைத்தார் வாலி. `நான் ஒரு படம் எடுக்கிறேன். சின்னவர்தான் நடிக்கிறாரு. கே.வி. மகாதேவன் மியூசிக் பண்றாரு. நீங்க பாட்டு எழுதணும். சின்னவர்தான் உங்களைப் பார்க்கச் சொன்னாரு’ என்று அந்த அம்மையார் வந்த விஷயத்தைச் சொன்னார். `சின்னவர்’ என்று அந்த அம்மையார் குறிப்பிட்டது எம்.ஜி.ஆரை. `இதுக்கு ஏம்மா நீங்க வரணும்? புரொடக்ஷ்ன் மானேஜர்கிட்ட சொல்லி அனுப்பி யிருக்கலாமே? என்றார் வாலி.

`அது மரியாதை இல்லேன்னுதான் நானே வந்தேன்‘ என்றார் அந்த அம்மையார்.  வாலியின் கண்கள் பனித்தன. தமிழ்த் திரையுலக வர லாற்றிலேயே அந்த அம்மையாரைவிட வல்லினம் மெல்லினம் பிறழாது, அழகு தமிழ் வசனங்களைப் பக்கம் பக்கமாக பேசி தமிழ் மக்களின் செவிகளிலெல்லாம் குடம் குடமாய் தேனை வார்த்த பிறிதொரு நடிகையை வாலி அதுவரையில் பார்த்ததில்லை.

`கணவனை இழந்த காரிகையொருத்தி, கையில் ஒற்றைச் சிலம்புடன் ஊழித் தீயென வந்திருக்கிறாள் என்று உன் கொற்ற வனிடம் சென்று ஓது! போ’ என்று ஒரே மூச்சில் வெண்கலக் கடையில் யானை புகுந்தாற் போல் வசனத்தை பிரளயமாகப் பேசி, இளங்கோவனின்  எழுத்துக்கு உயிர் கொடுத்தவர் அந்த அம்மையார். இதில் வேடிக்கை என்ன வென்றால், அந்த அம்மையாரின் தாய்மொழி தெலுங்கு.

  வாலியின் மரியாதைக்குரிய அந்த நடிகை, வாலியை வந்து சந்திப்பதுதான் மரியாதை என்று சொல்லும்பொழுது, ஒரு தமிழ்க் கவிஞனை  எம்.ஜி.ஆர். எப்படி கவுரவப்படுத்துகிறார் என்று எண்ணி வியந்தார் வாலி. அந்த அம்மையார் தான், கண்ணாம்பா.  அவர் தயாரித்து எம்.ஜி.ஆர் நடித்த ` தாலி பாக்யம்’ படத்திற்குப் பாட்டெழுதத்தான் வாலியைத் தேடி வந்திருந்தார். எம்.ஜி.ஆர் எப்பொழுதுமே தான் சம்பந்தப்பட்ட படங் களுக்கு பாட்டெழுத,  வாலி யைப் போய் பார்க்கும்படி தயாரிப்பாளர்களைத்தான் அவர் இருப்பிடத்திற்கே அனுப்பு வார்.  கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார், பி.ஆர் பந்துலு, கொட்டாரக்கரா முதலிய வர்களெல்லாம் எம்.ஜி.ஆர். சொன்னார் என்று வாலியின் வீட்டிற்கே வந்து அவரை சந்தித்ததுண்டு. `தெய்வத்தாய்’ படத்திற்கு வாலி பாட்டெழுதுவதற்குக் கூட கிளப் ஹவுஸ்சிற்கு வாலியை பார்க்க வந்திருக்கிறார்  பின்னால் அமைச்சரான ஆர்.எம்.வீ. இப்படியெல்லாம் வாலியின் அந்தஸ்தை உயர்த்திய பெருமை

எம்.ஜி.ஆருக்கு  உண்டு.

அவர்பால் இவ்வளவு அன்பு கொண்ட எம்.ஜி.ஆருக்கு  வாலியால் ஒரு தர்மசங்கட நிலை ஏற்பட்டது. வாஹினி ஸ்டூடியோவில் ` எங்க வீட்டுப் பிள்ளை ‘ படத்திற்கான பாடல் ஒலிப்பதிவாகிக் கொண்டிருந்தது. விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைக்க,

 ‘நான் மாந்தோப்பில் நின்றிருந் தேன்’  என்ற பாடலை டி.எம்.எஸ்சும், எல்.ஆர். ஈஸ்வரியும் பாடிக் கொண்டிருந்தார்கள்.  ரிக்கார்டிங் தியேட்டருக்குள் நடிப்பிசைப் புலவர் கே.ஆர் ராமசாமியோடு, எம்.ஜி.ஆர். வந்து அமர்ந்து பாட்டைக் கேட்டார்கள். ஒலிப்பதிவான பாடலை வெகுவாக ரசித்துக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் வாலியிடம் ஏதோ தனியாகப் பேச வேண்டு மென்று சொல்லி, அவரை ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வெளியே உள்ள ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

`வாலி! உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கட மான நிலைமை...’ என்று எம்.ஜி.ஆர் சொன்னதும் வாலிக்குத் தூக்கி வாரிப்போட்டது. `என்னண்ணே?’ என்று பதட்டத்தோடு கேட்டார் வாலி. ` நீங்க ஸ்டூடியோவிற்கு வரும்போது நெத்தியிலே விபூதி குங்குமம் இட்டுக்காம வந்தா தேவலே’ என்று சற்று தயக்கத்தோடு சொன்னார் எம்.ஜி.ஆர்.

 `ஏன் அண்ணே! இதனால என்ன வந்தது?’ என்றார் வாலி.  எம்.ஜி.ஆர். சற்று விளக்க மாகச் சொல்ல ஆரம்பித்தார். `வாலி, நீங்க திமுகவில உறுப்பினரில்லே. அரசியல் தொடர்பில்லாதவர்ன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்க எனக்கு பாட்டு எழுதுறீங்க...!’

(தொடரும்)