உதடு ஒட்டாத திருக்குறள்கள்!

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2019

திருக்குறள் ஏராளமான சிறப்புகளைக் கொண்டது. நாம் குறட்பாக்களை கவனமாகப் படித்தால் நல்ல கருத்துகள் மட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான, ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் கிடைக்கும்.

முதல் திருக்குறள் 'அ'கரத்தில் தொடங்கும். கடைசிக் குறளின் கடைசி எழுத்து 'ன்'இல் முடியும் என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள். இதைப்போல வேறு என்னென்ன அபூர்வங்கள் திருக்குறளில் இருக்கின்றன?

உங்களில் ஒரு சிலருக்கு, உதடு ஒட்டாத திருக்குறள் இருப்பது தெரியும். பொதுவாக, 'ப' வரிசை எழுத்துகளையும், 'ம' வரிசை எழுத்துகளையும் உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டும். இந்த எழுத்துகள் இல்லாமல் ஒரு குறள் இருந்தால் அந்தக் குறள்களை உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டாது.

உதாரணமாக, 341வது திருக்குறளை எடுத்துக் கொள்வோம்.

'யாதனின் யாதனின் நீங்கியான் நேரதல்

அதனின் அதனின் இலன்'.

அதாவது, யார் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பொருள் மீது அதிகப் பற்று வைக்காமல் இருக்கிறாரோ அவருக்கு, அந்தப் பொருளால் தீங்கு எதுவும் நேராது என்பதே இக்குறளின் பொருள்.

இந்தக் குறளை உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டாது. இந்தக் குறள் மட்டுமல்ல; இன்னும் ஏராளமான குறட்பாக்களை உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டாது.

உதாரணத்துக்கு 1082வது குறளான,

'நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து".

இந்தக் குறட்பாவும் உதடுகள் ஒட்டாத திருக்குறள்தான். உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டாத திருக்குறளை 'இதழகல்' குறட்பாக்கள் என்றும் சொல்வார்கள். இதழ்கள் ஒட்டாமல் அகலுவதைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.

சரி மொத்தம் எத்தனை இதழகல் குறட்பாக்கள் திருக்குறளில் உள்ளன? உங்களுக்குத் தெரிந்த குறளை எல்லாம் ஞாபகப்படுத்திப் பாருங்கள். அல்லது புத்தகம் இருந்தால் புரட்டிப் பாருங்கள்.

கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடை கீழே உள்ளது.

விடை

208, 240, 286, 310, 341, 419, 427, 472, 489, 516, 523, 678, 679, 894, 1080, 1082, 1177, 1179, 1211, 1213, 1214, 1236, 1286, 1296.