மயிலும் குரங்கும்!

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2019

தாதன்­கு­ளம் கிரா­மத்தை ஒட்டி, அடர்ந்த காடு இருந்­தது. அதில் வசித்த மயில், இயற்கை பொருட்­க­ளால் அழ­கிய வீட்டை கட்­டி­யது. அதன் அருகே, தர­மான நாவல் மரம் ஒன்றை வளர்த்­தது. அந்த மரம் கனி­களை பொழிந்­தது.

இரக்­க­மும், அன்­பும் நிறைந்த மயில், அந்த பழங்­களை புசித்­த­து­டன், கேட்ட உயி­ரி­னங்­க­ளுக்கு எல்­லாம், மனம் உவந்து வாரி வழங்­கி­யது. பழங்­களை வயி­றார உண்ட உயி­ரி­னங்­கள், பணிந்து வணங்கி வாழ்த்­தின. பெரும் புக­ழு­டன் விளங்­கி­யது மயில்.

நக­ரப்­ப­கு­தி­யில் வசித்த குரங்கு ஒன்று, வழி தவறி அந்த காட்­டுக்கு வந்­தது. நாவல் மரத்­தில் பழங்­கள் நிரம்­பி­யி­ருப்­ப­தைக் கண்டு குதுா­க­லித்­தது. மயி­லுக்கு புகழ் பெரு­கி­யி­ருப்­ப­தைக் கண்­ட­தும், அதன் மன­தில், வஞ்­சக எண்­ணம் முளை­விட்­டது.

மயிலை ஒழித்­துக்­கட்டி, நாவல் மரத்தை அப­க­ரிக்க முடி­வெ­டுத்­தது. அதற்­காக ஒரு திட்­டத்தை தீட்­டி­யது. நேர­டி­யாக சண்­டை­யி­டா­மல், மயி­லுக்கு புகழ்­மாலை சூட்டி வலை­யில் வீழ்த்­தும் திட்­டம் தான் அது.

செயற்கை வண்­ணங்­களை எடுத்து வந்து மயிலை சந்­தித்த குரங்கு, 'உன்னை விட அழ­கான பற­வையை, இந்த காட்­டில் நான் பார்த்­ததே இல்லை. அத­னால் தான், எல்லா உயி­ரி­னங்­க­ளும் உன்னை வணங்­கு­கின்­றன. உன்னை இன்­னும் அழகு படுத்­தி­னால் உலக அள­வில் புகழ் பெறு­வாய். உலக அழகி போட்­டி­யில் பங்­கேற்­க­லாம்...' என, இனிக்க இனிக்க பேசி­யது.

புகழ்ச்­சி­யில் மயங்­கி­யது மயில். குரங்கு சொன்­ன­வற்றை எல்­லாம் தலை­யாட்டி ஒப்­புக்­கொண்­டது. எடுத்து வந்­தி­ருந்த வண்­ணங்­களை, மயில் தோகை மீது பூசி­யது குரங்கு. அதன் இயற்கை அழகு மங்­கி­யது.

இதை அறி­யாது, கப­ட­மான வார்த்­தை­களை நம்­பிய மயில், 'எல்லா விவ­ர­மும் தெரிந்து இருக்­கி­றாய்... உன் போல் அறி­வுள்ள குரங்கை காண்­பது அரிது. நீ என்­னு­டன் தங்­கி­னால் மகிழ்ச்சி அடை­வேன்...' என்­றது.

தீட்டி வந்த திட்­டம் சுல­ப­மாக நிறை­வே­றி­ய­தால், குரங்­கின் மண்­டை­யில் கர்­வம் ஏறி­யது. மயி­லின் வீட்­டில் குடி­யே­றி­ய­தும், வஞ்­சக எண்­ணத்தை அரங்­கேற்ற துவங்­கி­யது.

முதல் உத்­த­ர­வாக, 'மயிலை வணங்­கும், எல்லா உயி­ரி­னங்­க­ளும் என்­னை­யும் வணங்கி செல்ல வேண்­டும்' என, நிபந்­தனை விதித்­தது.

குரங்­கின் சொல்­லுக்கு, தலை­யாட்­டும் பொம்­மை­யாக மாறி­யது மயில்.

அடுத்­தக்­கட்­ட­மாக, 'இனி­மேல், நாவல் பழங்­களை இல­வ­ச­மாக சாப்­பிட அனு­ம­திக்க முடி­யாது; சிறிய தொகை கொடுத்­தால் தான் பழங்­கள் கிடைக்­கும். அது­வும் குறிப்­பிட்ட அள­வு­தான் பறிக்க வேண்­டும்' என, உத்­த­ர­விட்­டது குரங்கு.

உயி­ரி­னங்­கள் எல்­லாம் கவலை அடைந்­தன. குரங்­கின் அட்­டூ­ழி­யம் அதி­க­ரிப்­பது பற்றி, மயி­லி­டம் புகார் கூறின. எதை­யும் காதில் வாங்­கா­மல், புக­ழில் மயங்­கித் திரிந்­தது மயில். புகார் கூறிய உயி­ரி­னங்­க­ளை­யும் கடிந்து கொண்­டது. உண்­மையை அறி­யும் திறனை முற்­றாக இழந்­தது மயில்.

இது­தான் தக்க தரு­ணம் என, சேட்­டையை தீவி­ர­மாக்­கி­யது குரங்கு. காட்டை வளப்­ப­டுத்த உழைத்த உயி­ரி­னங்­களை எல்­லாம் அடித்து நொறுக்­கி­யது.

தவ­றான ஆலோ­ச­னை­களை கூறி, மயி­லுக்கு கெட்ட பெயர் ஏற்­ப­டுத்­தி­யது. அதன் புகழை கெடுத்­தது. அழ­கில் மிளி­ர­லாம் என கூறி, மயி­லுக்கு விஷத்தை ஊட்­டி­யது. அதை, அமிர்­தம் என்று குடித்த மயில், மயங்கி சாய்ந்­தது. உடனே, அதன் இறக்­கை­களை வெட்டி வீசி­யது. அழ­கிய தோகையை இழந்த மயில் துடி­து­டித்து உயிரை விட்­டது.

இதை அறிந்த காட்டு உரி­யி­னங்­கள் அழுது புலம்­பின. செய்­வ­த­றி­யாது திகைத்­தன. அவை திரண்டு, காட்­டின் பாது­காப்பு மந்­தி­ரி­யான, கரடி தலை­வ­னி­டம் முறை­யிட்­டன. குரங்­கின் கொட்­டத்தை அடக்க அதி­ர­டி­யாக வீயூ­கம் வகுத்­தது கரடி.

மயி­லின் வீட்­டை­யும், நாவல் மரத்­தை­யும் சுற்றி வளைத்­தது கரடி கூட்­டம். இதைக் கண்­ட­தும், அஞ்சி நடுங்கி தப்பி ஓட முயன்­றது குரங்கு.

கம்­பீ­ர­மாக சிரித்த கரடி தலை­வன், 'குரங்கே... உன் ஆட்­டம் எல்­லாம் முடிந்­தது. நீ தப்­பிக்­கவே முடி­யாது; மயிலை கொன்ற குற்­றத்­துக்கு தக்க தண்­டனை கிடைக்­கும்; இனி­யும் உன் பொய் மூட்டை பிர­சா­ரம் எல்­லாம் எடு­ப­டாது. தவறை உணர்ந்து சர­ண­டைந்து விடு...' என, எச்­ச­ரித்­தது. வேறு வழி­யின்றி, சரண் அடைந்­தது குரங்கு. அதற்கு, தக்க தண்­டனை கிடைத்­தது.

மழ­லை­களே... புக­ழு­ரை­யில் மயங்­கிய மயி­லின் கதியை பார்த்­தீங்­களா... முகஸ்­துதி செய்­வோ­ரி­டம் எச்­ச­ரிக்­கை­யாக இருங்­கள். சுற்­றி­லும் நடக்­கும் உண்­மை­களை அறிந்து, நன்மை செய்து வாழுங்­கள்.

– எஸ். டேனி­யல் ஜூலி­யட்