வெங்காய கையிருப்பு அளவு சரிபாதியாக குறைப்பு

பதிவு செய்த நாள் : 03 டிசம்பர் 2019 20:30

புதுடெல்லி

மத்திய அரசின் நுகர்வோர் விவகார இலாகா வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நோக்கோடு வெங்காய வியாபாரிகளின் கையிருப்பு அளவை சரிபாதியாக குறைக்கும் உத்தரவை இன்று வெளியிட்டது.

இன்று வெளியான உத்தரவு விவரம்:
கடந்த சில வாரங்களாக பல நடவடிக்கைகள் எடுத்த பிறகும் வெங்காய விலை குறையவில்லை.
அதன் காரணமாக சில்லறை மற்றும் மொத்த விலை வெங்காய வியாபாரிகளின் கையிருப்பு அளவை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி செவ்வாய்க்கிழமையிலிருந்து சில்லரை வியாபாரிகள் கையில் வைத்திருப்பதற்கான வெங்காய இருப்பு அளவு 10 டன்னிலிருந்து 5 டன்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் மொத்தவிலை வெங்காய வியாபாரிகளின் கையிருப்பு அளவு 50 டன்களில் இருந்து 25 டன்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கையிருப்பு குறைவு செவ்வாய்க்கிழமையில் இருந்து அமலுக்கு வரும் என்றும் மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு மட்டும் இந்த கையிருப்புக் கட்டுப்பாடுகள் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.