சத்தீஸ்கரைப் போல் ஜார்க்கண்டிலும் மாற்றம் நிகழ்த்திக் காட்டுவோம்: ராகுல் காந்தி பேச்சு

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 20:28

சிம்தேகா

ஜார்கண்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,  சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு நிகழ்த்திய மாற்றத்தைப் போல், ஜார்கண்டிலும் நிகழ்த்திக்காட்டுவோம் என்று கூறினார்.

ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. 81 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 30ம் தேதி நடைபெற்றது. அதற்கடுத்து முறையே டிசம்பர் 7,12,16,20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 26ம் தேதி, பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சிம்தேகா பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

”சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், ஒரு வருடத்திற்குள் அங்கிருந்த காட்சியை மாற்றிவிட்டது. அங்கு உங்களுக்கு (பழங்குடியின மக்கள்) நிலம், காடுகள் மற்றும் நீர் என அனைத்தும் உள்ளது. உங்களை பாதுகாக்க நாங்கள் அங்கு உள்ளோம்” என்று தெரிவித்தார்.

”சத்தீஸ்கரில் அப்போது இருந்த பாஜக அரசு, பழங்குடியின மக்களின் நிலங்களை பறித்து, அவற்றை தொழிலதிபர்களிடம் வழங்கினர். ஆனால், காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததும், அபகரிக்கப்பட்டிருந்த நிலங்களை மீட்டு மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்தோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வோம் என்று எங்கெல்லாம் வாக்குறுதி அளித்தோமோ, அங்கெல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்துகாட்டினோம். ஜார்கண்ட் மாநிலத்திலும் அது நடக்கும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால், நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்” என்று ராகுல் காந்தி உறுதியளித்தார்.