பிஎம்சி வங்கியின் 78 சதவீத வாடிக்கையாளர்கள், முழு நிலுவைத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 19:34

புதுடில்லி

பிஎம்சி வங்கியின் 78 சதவீத வாடிக்கையாளர்கள், தங்கள் முழு நிலுவைத் தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் நடைபெற்ற ரூ.4,355 கோடி மோசடி அம்பலமானதையடுத்து அதன் செயல்பாடுகள் அனைத்தும் கடந்த செப்டம்பா் முதல் ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், பிஎம்சி வங்கியின் 78 சதவீத வாடிக்கையாளர்கள், தங்கள் முழு நிலுவைத் தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தெரிவித்தார்.

மக்களவையில் இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் இன்று பேசுகையில்,

”பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்களில் சுமார் 78 சதவீதம் பேர் இப்போது தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து முழு நிலுவைத் தொகையையும் திரும்பப்பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறிய வைப்பாளர்கள். அவர்களின் கவலைகள் தீர்க்கப்பட்டுவிடும்.

வங்கியை வழி நடத்தியவர்களைப் பொறுத்தவரை, அவர்களது இணைக்கப்பட்ட சொத்துக்களை சில நிபந்தனைகளின்கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சொத்துக்களை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான் தெரிவித்தார்.