பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 18:15

சென்னை,

பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
 தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் அளவுக்கு அதிகமான மழையால் சென்னை புறநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகுந்த கவலையளிக்கின்றன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டில் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கி விட்ட போதிலும், ஆரம்பத்தில் சில நாட்கள் பெய்த மழை, அதன்பின்னர் சொல்லிக் கொள்ளும்படியாக பெய்யவில்லை. இதனால் சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும்,

பிற மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்ட சரிவும் ஏற்பட்டு விடுமோ என மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தான், கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை பல வழிகளில் நன்மை செய்யும் என்பதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

பருவமழையால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கவும், அவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றில் இருந்து மக்களைக் காக்கவும் தமிழக அரசின் பல்வேறு துறைகளும், மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.
தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழை பெய்துள்ளது. பெருங்களத்தூர், மடிப்பாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

இதனால் ஏராளமான மக்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர்களில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். சுங்குவார்சத்திரம் அருகே ஜம்போடை ஏரி உடைந்து நீர் வெளியேறியதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் தான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. கடலூரில் ஒரே நாளில் 17 செ.மீ. மழை பெய்ததால் நகரின் 80-க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 8000-க்கும் கூடுதலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடலூர்- விருத்தாசலம் இடையிலான சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம், கெடிலம் ஆறு, தென்பெண்ணையாறு, மணிமுக்தாறு, வெள்ளாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீராணம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நிரம்பி வழிவதால் அவற்றையொட்டிய பகுதிகளில் வாழும் மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.

எந்த ஒரு சூழலையும் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாகவும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஆனாலும், கடந்த கால நிகழ்வுகளை நினைத்து மக்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

காவிரிப் பாசன மாவட்டங்களில் மழை மற்றும் மழை சார்ந்த விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது வேதனையளிக்கிறது. கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழையால் பொதுமக்களுக்கும், பயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் பொதுமக்களிடையே ஒருவகையான அச்சம் நிலவி வருகிறது.

எனவே, மழையால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உடனடியாக நிலைமை சமாளிக்கத் தேவையான நிவாரண உதவிகளையும் அரசு விரைந்து வழங்க வேண்டும்  என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.