ஆவணங்களை உயர்அதிகாரியிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 16:37

சென்னை

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்கு ஆவணங்களை உயர்அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மீது அவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடையும் விதித்தும் உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.

பணிக்காலத்தை மேலும் நீட்டிக்கக் கோரி பொன். மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்று, ஆவணங்களை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்குமாறு பொன். மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது.

மேலும், பொன் மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு மீது, எதற்காக பணியை நீட்டிக்க வேண்டும் என விளக்கம் கேட்டு பொன் மாணிக்கவேலுவுக்கும், டிராபிக் ராமசாமிக்கும் ராஜேந்திரனுக்கும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப இன்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பொன். மாணிக்கவேல், அரசு கடிதம் - விவரம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்,  வழக்கு விசாரணைகள் குறித்த ஆவணங்களை ஒப்படைக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி ஏ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம், அல்லது உச்சநீதிமன்றம் அனுமதியின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது.

எனது பதவி நீட்டிப்பு தொடா்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் அது தொடா்பான உத்தரவிடும்வரை காத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என பொன் மாணிக்கவேல் தமிழ்நாடு அரசுக்கு நேற்ற பதில் கடிதம் அனுப்பினார்.