மாலையணிய மந்திரம்!

பதிவு செய்த நாள் : 03 டிசம்பர் 2019

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்

வனமுத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்

சாந்த முத்ராம் சத்திய முத்ராம் வ்ருது முத்ராம் நமாம் யஹம்

சபர் யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே

குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே

சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா.

41 நாள் விரதம் அவசியம்!

கார்த்திகை மாதம் முதல் நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். இந்நாளில் வாய்ப்பு கிடைக்காவிட்டால், வரும் சனிக்கிழமைகளில் அல்லது உத்திர நட்சத்திரத்தன்று மாலை அணியலாம். அர்ச்சகர் அல்லது குருசாமியின் கையால் ருத்ராட்சமாலை அல்லது துளசிமணி மாலை அணிந்தபின் கோயிலை வலம் வந்து தேங்காய் உடைத்து சுவாமிகளை வழிபட வேண்டும். பதினெட்டாம் படியேறி சுவாமியை தரிசிக்க விரும்புவோர் கண்டிப்பாக 41 நாள் விரதமிருப்பது அவசியம்.

பக்தர்கள் கவனிக்க...

கறுப்பு அல்லது நீலவண்ண ஆடை அணிய வேண்டும். செருப்பு அணியக்கூடாது. கட்டில், மெத்தை, தலையணை பயன்படுத்தக்கூடாது. மது, மாமிசம், தாம்பத்யம் தவிர்க்க வேண்டும். பொய் பேசக்கூடாது. உறவினரின் வீட்டில் மரணம் நேர்ந்தால் செல்வது கூடாது. மீறினால் மாலையை கழற்றுவதோடு மலைக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். சவ ஊர்வலத்தை காண நேர்ந்தால் வீட்டில் கோமியம் தெளித்து நீராடிய பின்னரே பூஜை செய்ய வேண்டும்.

கன்னிசாமிகளே.. கவனம்!

சபரிமலைக்கு முதல் முறையாக செல்லும் சிலர், பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்னும் ஆசையில் பம்பை நதிக்கரையில் நீராடி அங்கேயே இருமுடி கட்டுகின்றனர். பம்பையில் நீராடி மாலையணிந்து உடனே மலையேறுவது பெரும்பாவம்.

மறந்துடாதீங்க பக்தர்களே! இருமுடி பொருட்களின் லிஸ்ட்..

1. மஞ்சள் பொடி  – 100 கிராம் (மலைநடை பகவதி, மஞ்சள் மாதாவுக்காக) 2 சந்தன பாக்கெட், 3. குங்கும பாக்கெட், 4. நெய் தேங்காய் –1, 5.பசுநெய் 6. விடலைத் தேங்காய் – 5 (எரிமேலி, சபரிபீடம், சரங்குத்தி, பதினெட்டாம்படி, ஆழி), 7. சிறிய பன்னீர் பாட்டில், 8. கற்பூர பாக்கெட், 9. பச்சரிசி.

அப்படி பார்க்காதீங்க!

மலைக்கு கிளம்பும் போது, வீட்டையோ, மனைவி, குழந்தைகளையோ, பெற்றோரையோ திரும்பி திரும்பிப் பார்க்காமல் செல்வது அவசியம். பக்தர்கள் தங்களின் ஆன்மாவை கடவுளிடம் சமர்ப்பிக்க வேண்டும். சுவாமி ஐயப்பனின் திருவடியில் மனம் முழுமையாக ஒன்றுபட வேண்டும் என்பதன் அடிப்படையில், இந்த நடைமுறை பக்தர்களால் பின்பற்றப்படுகிறது.

அம்மனுக்கும் ஆபரணம்!

ஐயப்பனுக்கு மட்டுமின்றி மாளிகைப்புறத்தம்மனுக்கும் திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும். ஐயப்பனுக்கு ஆபரணம் சாத்தி பூஜை நடக்கும் போது மாளிகைப் புறத்தம்மனுக்கும் பூஜை நடத்துவர். மகரஜோதி விழா முடிந்த பிறகும் ஆறுநாள் நடை திறந்திருக்கும்.