மூக்கின் மீது விரல் வைத்த ஐயப்பன்!

பதிவு செய்த நாள் : 03 டிசம்பர் 2019

ஒரு முறை காஞ்சி மகாசுவாமிகள் மூக்கின் மீது விரல் வைத்தபடி யோசனையில் ஆழ்ந்த கோலத்தில் ஐயப்பன் சிலை ஒன்று இருந்ததையும், பின்னர் விரலை எடுத்து விட்டு இயல்பாக கையை வைத்துக்கொண்டதுமான அபூர்வ தகவல் ஒன்றை சொல்லத்தொடங்கினார்.

ஒரு ஊரில் மூக்கின் மேல் விரல் வைத்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தபடி ஐயப்பன் சிலை இருந்தது.  சமஸ்கிருதக் கவிஞரான மகான் அப்பய்ய தீட்சிதர் அதைக் கண்டு காரணத்தை விசாரித்தார்.  சிற்பியின் கனவில் தோன்றிய ஐயப்பன், இந்த கோலத்தில் காட்சியளித்ததாகவும், அதன்படியே சிலை செய்யப்பட்டதாகவும் மற்றவர்கள் தெரிவித்தனர்.  ஐயப்பன் எது குறித்துச் சிந்தனையில் ஆழ்ந்துள்ளார் என்பதை சரியாகத்  தெரிவித்தால், சிலை தானாகவே விரலை எடுத்து சரியாக வைத்துக்கொள்ளும் என்றும் ஊர் மக்கள் கூறினர்.

ஐயப்பன் ஏன் இப்படி இருக்கிறார் என அறிய தீட்சிதர் ஆழ்ந்து யோசித்தார்.  அதனைப் பற்றி ஸ்லோகம் ஒன்றை எழுதினார்.  அதில் ‘‘ஐயப்பனின் தந்தை சிவன்.  எனவே தந்தையின் மனைவியான பார்வதியை ஐயப்பன் ‘அம்மா’ என்று கூப்பிடுவார்.  மோகினியாக மாறிய விஷ்ணு ஐயப்பனின் தாய்.  அவரையும் ‘அம்மா’ என்றே கூப்பிடலாம்.   ஆனால் விஷ்ணுவின் மனைவியான லட்சுமியை எப்படி கூப்பிடுவது? ஐயப்பனுடைய தாயின் பத்தினி அவள். தந்தையின் மனைவி அம்மா.  தாயின் மனைவியை என்ன சொல்லி அழைப்பது என்றே சிந்தனையில் ஆழ்ந்துள்ளதாக தீட்சிதர் சமத்காரமாக தெரிவித்தார்.

இதை சொன்னதும் விரலை எடுத்துவிட்டு வழக்கம்போல் தன் கையை முழங்காலில் வைத்தபடி உட்கார்ந்துவிட்டான் ஐயப்பன்.  பக்தர்கள் இப்படியும் அதிசயம் நிகழுமா என தங்களின் மூக்கின்  மீது வைத்தபடி வியந்தனர்.  இதைக் கண்ட மகாசுவாமிகள் குழந்தை போல ‘கலகல’வென சிரித்தார்.