பாலியல் குற்றவாளிகளுக்கு கருணை மனு வாய்ப்பை வழங்கக்கூடாது: வெங்கையா நாயுடு ஆவேசம்

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 15:33

புதுடில்லி

பாலியல் குற்றவாளிகளுக்கு கருணை மனு என்ற வாய்ப்பை வழங்கக்கூடாது என்றும், அது குறித்து பரிசீலிக்கவேண்டும் என்றும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று கூறினார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த நவம்பர் 18ம் தேதி தொடங்கியது. இதில், ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது, சிறப்பு அந்தஸ்து ரத்து, சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது, மகாராஷ்டிர அரசியல் சூழல் ஆகியவை குறித்து கடந்த நாட்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் சில நபர்களால் கற்பழிக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை முன்வைத்து, எம்பிக்கள் இன்று குரல் எழுப்பினர். அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்த விவகாரம் குறித்துப் பேச அனுமதி அளித்த, இதுபோன்று இதர இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் பேசுகையில்,

”இந்த பிரச்சனையை அரசியல் ஆக்கக்கூடாது. பாலியல் வன்கொடுமை குற்றங்களை இழைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும். மதம், இனம், சாதி ஆகியவற்றை பார்க்காமல் தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும்” என்று வலியுத்தினார்.

பின்னர் பேசிய சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் ஜெயா பச்சன்,

”இந்த குற்றம் நடந்த பகுதியில், பாதுகாக்கவேண்டிய காவல்துறை அதிகாரிகள் தான் இதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும். அவர்கள்தான் இதற்கு பதிலளிக்கவேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தி அடித்துக் கொலை செய்யப்படவேண்டும்” என்று ஆவேசமாக கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் வில்சன்,

”பாலியல் வன்கொடுமைகள் இழைப்பவர்களின் ஆண் உறுப்பின் விதைகளை அகற்ற பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு வழங்கப்படவேண்டும். அப்படி செய்தால், அதுபோன்ற சம்பவங்கள் நிகழாது. மேலும், அந்த குற்றவாளிகளின் அடையாளங்கள் பொதுமக்களிடம் வெளிபடுத்தவேண்டும்” என்று கூறினார்.

ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங் பேசுகையில்,

”பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில், குற்றவாளிகளுக்கு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதேபோல், பிஜூ ஜனதா தளம் கட்சியின் அமர் பட்நாயக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரங்கராஜன், திரிணாமூல் காங்கிரஸின் சாந்தனு சென், வைகோ ஆகியோர் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும், அப்படி செய்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்றுcd தெரிவித்தனர்.

பின்னர் பேசிய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு,

”இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகு என்ன நடக்கிறது?. நாம் அனைவரும் அதை பார்க்கிறோம். மேல்முறையீடு, கருணை மனு. இதுபோன்றவர்களுக்கு கருணை பார்ப்பதா?. குற்றவாளிகளுக்கு கருணை மனுவை குடியரசு தலைவருக்கு அளிக்கலாம் என்ற வாய்ப்பை சட்டத்தில் இருந்து நீக்குவது குறித்து பரிசீலிக்கவேண்டும்” என்று கூறினார்.

“பெண்களுக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற அட்டூழியங்களை முளையிலேயே கிள்ளி எறிந்திவிடவேண்டும். ஆனால், இதுவே மிகவும் தாமதம்தான்” என்று வெங்கையா நாயுடு கூறினார்.