அயோத்தி ராமஜென்ம பூமி தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 15:17

புதுடில்லி

அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் நவம்பர் 9ம் தேதி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. பிரச்சனைக்குரிய 2.27 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம். முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள சன்னி வக்பு வாரியத்திற்கு அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அல்லது மாநில அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என சன்னி வக்பு வாரியம் முடிவு செய்தது. எனினும், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்தது.

இந்நிலையில், மவுலானா சயித் ஆசாத் ரஷித் என்பவர் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். அயோத்தி வழக்கைத் தொடர்ந்த எம்.சித்திக்கின் சட்டவாரிசு தான் இந்த மவுலானா ராஷித்.

அவர் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனுவில்,

”இந்து அமைப்புகளால் செய்யப்பட்ட சட்டவிரோத செயல்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்கு பரிசாக அயோத்தி நிலத்தை வழங்கியுள்ளனர்.

அடிப்படை ஆதாரங்களுக்காக நிலத்தை வழங்கவில்லை. மாறாக, சட்டவிரோத செயல்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளேன். இந்த வழக்கு முடிவுக்கு வரவேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளேன். இருந்தாலும், நீதி கிடைக்காத இடத்தில் அமைதி இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக வழங்கப்பட்ட முதல் மறுசீராய்வு மனு இது என்பது குறிப்பிடத்தக்கது.