டில்லியாக மாற சென்னை விரும்பவில்லை- பசுமையான காடுகளை காக்க வேண்டும் - ஐகோர்ட் நீதிபதிகள்

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 14:38

சென்னை,

கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னையில் பசுமையான காடுகளை காக்க வேண்டும். டில்லியாக மாற சென்னை விரும்பவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 75-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக இருக்கும் இந்த மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து கேப்டன் பி.பி. நாராயணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில் கஜா புயலினால் மருத்துவமனை வளாகத்தில் இருந்த பல மரங்கள் சாய்ந்து விழுந்தன. எஞ்சிய மரங்களையும் கட்டிடம் கட்டுவதற்காக வெட்டுவது சட்டவிரோதம். இந்த மரங்களில் பலவகையான பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன. எனவே, இந்த மரங்களை வெட்ட தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.சரவணன் ஆகியோர் கொண்ட சுற்றுச்சூழல் வழக்குகளை விசாரிக்கும் டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட தடை விதித்தனர்.

மரங்களை வெட்டாமல் புதிய கட்டிடம் கட்ட முடியுமா? , மாற்று இடம் உள்ளதா?, மரங்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாமல், அதை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நட்டு பராமரிக்க முடியுமா? என்பது உள்பட பல கேள்விகளை கேட்ட நீதிபதிகள், அதற்கு பதில் அளிக்கும்படி தமிழக பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டனர். விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

டில்லியாக மாற வேண்டாம்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னையில் பசுமையான காடுகளை காக்க வேண்டும். டில்லியாக மாற சென்னை விரும்பவில்லை என நீதிபதிகள் கூறினர்.

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் மரங்களை வெட்டாமல், மாற்று இடத்தில் கூடுதல் கட்டிடங்களைக் கட்ட முடியுமா? என்பது குறித்து தமிழக அரசு டிசம்பர் 4-ம் தேதி அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.