பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைத் தூக்கிலிடவேண்டும்: மக்களவையில் எம்பிக்கள் குரல்

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 14:29

புதுடில்லி

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இன்று குரல் கொடுத்தனர்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த நவம்பர் 18ம் தேதி தொடங்கியது. இதில், ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது, சிறப்பு அந்தஸ்து ரத்து, சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது, மகாராஷ்டிர அரசியல் சூழல் ஆகியவை குறித்து கடந்த நாட்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.

சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் சில நபர்களால் கற்பழிக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை முன்வைத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர்.

மக்களவையில் இன்று காலை அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரம் குறித்து பேச சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி வழங்கினார்.

அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் உத்தம் குமார் ரெட்டி, 26 வயது பெண் மருத்துவருக்கு நடந்த அநீதி குறித்துப் பேசி, தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் வெளியிட்ட உணர்வற்ற அறிக்கையை குறிப்பிட்டு சாடினார். மேலும், அந்த வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு காலம் தாழ்த்திய காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தார்.

மரண தண்டனை விதிக்கவேண்டும்

பின்னர் பேசிய திமுக எம்பி டி.ஆர். பாலு, கோயம்பத்தூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி சவுகத் ராய்,

”பாலியல் வன்கொடுமைகளை இழைக்கும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பின்னர் பேசிய பிஜூ ஜனதா தள எம்பி பினாகி மிஸ்ரா,

”நிர்பயா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை நிறைவேற்றப்படுவதில் ஏன் இத்தனை தாமதம்” என்று கேள்வி எழுப்பினார். மேலும்,”குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும்” என்று பினாகி மிஸ்ரா வலியுத்தினார்.

இறுதியாக அரசு தரப்பில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

”இந்த பிரச்சனை குறித்து விவாதங்கள் நடத்த அரசு தயாராக இருக்கிறது. அதன்மூலம், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் விதத்தில், சட்டங்கள் கடுமையாக்குவது குறித்து முடிவு எடுக்கலாம்” என்று தெரிவித்தார்.