மேட்டுப்பாளையம் அருகே வீடு இடிந்து 17 பேர் சாவு- பலியானவர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் உதவி

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 12:31

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - நடூர் பகுதியில் தொடர் கனமழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை இரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தொடர் கனமழை காரணமாக நடூர் பகுதியில் 4 வீடுகள் திங்கள்கிழமை அதிகாலை 3:00 மணியளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் 2 சிறுவர்கள், 7 பெண்கள் உட்பட 17 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை தீயணைப்புத்துறையினருடன் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட 17 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நிதியுதவி முதலமைச்சர் அறிவிப்பு

மேட்டுப்பாளையத்தில் வீடுகளில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், 

தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இன்று அதிகாலை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் மூன்று வீடுகளில் சுவர் இடிந்து விழுந்ததில், குரு, ராம்நாத், ஆனந்த்குமார், ஹரிசுதா, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, வைதேகி, திலகவதி, அருக்காணி, ருக்மணி, நிவேதா, சின்னம்மாள் மற்றும் சிறுமி அக்ஷயா, சிறுவன் லோகுராம் உள்பட 15 நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பலத்த மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மேற்படி 15 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.