தமிழகத்தில் டிசம்பர் 27, 30ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 10:19

சென்னை,         

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் வரும் டிசம்பர் 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் ஆர். பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

2 கட்டங்களாக தேர்தல்

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 6ம் தேதி வெளியிடப்படும், மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் டிசம்பர் 13ம் தேதியும், 

வேட்புமனு ஆய்வு டிசம்பர் 16ம் தேதியும், வேட்புமனு திரும்பப்பெறுவது டிசம்பர் 18ம் தேதியும் நடைபெறும்.

வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். 

வாக்கு எண்ணிக்கை 2020 ஜனவரி 2ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று ஆணையர் அறிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல்?

நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் ஆர். பழனிசாமி தகவல் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வருகின்றது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடித்து, தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுந்திரமாகவும் நடைபெற எல்லா விதத்திலும் தேர்தல் ஆணையத்தோடு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி வெளியீடு நகல் கீழே தரப்பட்டுள்ளது. முழு நகல் செய்தியையும்பார்வையிட கீழே சொடுக்கவும்.