தற்காப்புக்காக இனி சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து போடாது: கோயல் உறுதி

பதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2019 16:37

மும்பை

தற்காப்பு நடவடிக்கை என்ற வகையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிலும் இனி இந்தியா கையெழுத்திட போவதில்லை. அத்தகைய ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கவும் மாட்டோம் என்று இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் மும்பையில் தெரிவித்தார்.

இந்திய மக்களின் நலனையும் இந்திய தொழில்துறை வர்த்தகம் ஆகியவற்றின் நலனையும் பாதுகாப்பது இன்று மிகவும் முக்கியம் என்றும் கோயல் கூறினார்.

இந்த காரணத்துக்காகவே தாய்லாந்தில் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திடாமல் இந்தியா வெளிநடப்பு செய்தது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கையெழுத்திடாது என்று உறுதியாக அங்கு அறிவித்தார்.

உலக நாடுகளுடன் இந்தியா எத்தகைய உறவு கொள்ள விரும்புகிறது என்பதை உணர்த்துவதாக எதிர் காலத்தில் இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் அமையும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் பல லட்சக்கணக்கான சிறிய வர்த்தகர்கள் உள்ளனர் .. எனவே இந்தியாவில் பெருமளவு வர்த்தகம் செய்யும் இ காமர்ஸ்கம்பெனிகள் இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்தால்கூட நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.

பெரிய இ காமர்ஸ் கம்பெனிகள் பொருட்களின் விலையில் பெருமளவு தள்ளுபடி செய்து இந்தியாவில் விற்பதாக புகார்கள் வருகின்றன. இப்படிச் செய்வதால் சிறிய வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்த இ காமர்ஸ் கம்பெனிகள் இந்தியாவின் சட்டத்தை உணர்வு பூர்வமாக அமல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நான் இப்படிச் சொல்லுவதால் நீங்கள் என்னை சுதேசி  என்று கூட கூறலாம். அந்தப் பெயரை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.

அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டம் வகுக்கப்படுகிறது எனவும் கோயல் குறிப்பிட்டார்.