ஆப்கன் குண்டுவெடிப்பில் மூத்த ராணுவ கமாண்டர் பலி

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2019 20:26

காபுல்,

ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகுண்டுக்கு ஆப்கன் எல்லைப்படையை சேர்ந்த மூத்த ராணுவ கமாண்டர் ஜெனரல் ஜாஹிர் குல் முக்பில் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.

ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள மார்ஜாஹ் மாவட்டத்தில் ராணுவ கமாண்டர் ஜெனரல் ஜாஹிர் குல் முக்பில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் சாலையில் புதைக்கப்பட்டிருந்த கன்னி வெடி மீது ஏறிய போது வெடித்து சிதறியது.

இதில் ராணுவ கமாண்டர் ஜெனரல் ஜாஹிர் குல் முக்பில் மற்றும் உடன் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வாகனத்தில் இருந்த மேலும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த தாக்குதல் ராணுவ கமாண்டர் ஜெனரல் ஜாஹிர் குல் முக்பில்லை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என ஹெல்மண்ட் மாகாண ஆளுநரின் பேச்சாளர் ஓமர் ஜுவாக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் தாக்குதலுக்க்கு ஆளான ராணுவ வாகனத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சென்ற ஷாம்சத் டிவி நெட்வொர்க்கை சேர்ந்த பத்திரிகையாளர் சர்தார் முகமது சர்வாரி என்பவரும் காயமடைந்துள்ளதாக ஓமர் ஜுவாக் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்பதாக தலிபான் பேச்சாளர் குவாரி யூசுப் அஹ்மாதி செய்தி வெளியிட்டுள்ளார். ஹெல்மண்ட் மாகாணத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் தலிபான் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.