ஈராக் பிரதமர் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு: முழுமையான ஆட்சி மாற்றத்தை கோரி தொடர் போராட்டம்

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2019 20:20

நசிரியா

ஈராக் பிரதமர் அடெல் அப்டெல் மஹ்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்றிரவு அறிவித்தார். அவரது அறிவிப்பு வெளியான பின்பும் ஈராக் அரசுக்கு எதிரான போராட்டம் இன்று தொடர்ந்தது. ஈராக்கில் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

ஈராக்கில் பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் ஊழலை எதிர்த்து கடந்த அக்டோபர் மாதம் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை துவக்கினர்.

ஊழல்வாதிகள் நிறைந்த ஈராக் அரசு கலைக்கப்பட வேண்டும். ஈராக் அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். ஈராக் அரசியலில் ஈரானின் தலையீட்டை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராடி வருகிறார்கள்.

ஈராக் ஆதரவு அரசு படைகள் போராட்டக்காரர்கள் மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 15000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் மீது ஈராக் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தாக்குதலுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஈராக்கில் உள்ள ஈரான் தூதரகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஈராக் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 2 நாட்களில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறையை தொடர்ந்து ஈராக் மக்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று நாட்டின் உயர்மட்ட ஷியா இஸ்லாமிய மத குரு அயட்டோல்லா அலி சிஸ்டானி என அழுத்தம் கொடுத்தார்.

அதன் காரணமாக தன் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் அடெல் அப்டெல் மஹ்தி நேற்றிரவு அறிவித்தார். வரும் ஞாயிற்றுக்கிழமை தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பதாக அடெல் அப்டெல் மஹ்தி தெரிவித்தார். அவரது இந்த முடிவால் ஈராக் போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈராக் பிரதமரின் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து போராட்டம் கைவிடப்படும் என எதிர்பார்த்த நிலையில் இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஈராக்கின் இரண்டாம் புனித நகரான கர்பாலாவில் நேற்றிரவு இளம் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஏற்பட்ட மோதல் விடியும் வரை தொடர்ந்தது.

இதை தவிர ஈராக்கின் நசிரியா உட்பட பல நகரங்களில் நூற்றுக்கணக்கானோர் கூடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சில இடங்களில் டையர்கள் கொளுத்தப்பட்டன.

பிரதமர் அடெல் அப்டெல் மஹ்தியின் ராஜினாமா முதல்கட்ட வெற்றி தான். ஈராக் அரசில் உள்ள ஊழல்வாதிகள் அனைவரும் பதவி விலகி சட்டத்திற்கு முன் கொண்டு நிறுத்தப்பட வேண்டும். ஈராக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.