கேரளத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணைத்து புதிய வங்கி உருவாக்க உயர் நீதிமன்றம் அனுமதி

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2019 18:52

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு புதிய வங்கியாக செயல்படும் இந்த இணைப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எல்லாவற்றையும் கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்று கேரள மாநில கூட்டுறவு துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மலப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கி மட்டும் மாநில அளவிலான கூட்டுறவு வங்கியில் இணையப் போவதில்லை. அந்த மாவட்ட கூட்டுறவு வங்கி காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சுரேந்திரன் கூறினார்.

13 மாவட்ட கூட்டுறவு வங்கிகளை நினைக்கின்ற நடவடிக்கை ஒரு புரட்சிகரமான நடவடிக்கை. கேரள வங்கித்துறையில் இது பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். கேரள மக்கள் தங்களுக்கென தங்களுக்குச் சொந்தமான வங்கியினை இனிமேல் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று சுரேந்திரன் கூறினார்.

கேரள உயர்நீதிமன்றம் எதிர்ப்பு மனுக்களை எல்லாம் ரத்து செய்து விட்ட காரணத்தினால் கேரள மக்களின் சொந்த வங்கி விரைவில் செயல்படத் துவங்கும் என்று கேரள முதல்வர் பினரயி விஜயன் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

மாவட்ட கூட்டுறவு வங்கிகள் இணைப்புக்கு இந்திய ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் தந்திருப்பதாக கேரள கூட்டுறவு அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்தார்.