மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி: பாஜக அரசை சாடிய அசோக் கெலாட்

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2019 15:10

ஜெய்ப்பூர்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மத்திய பாஜக அரசை சாடியுள்ளார்.பாஜக தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததில் இருந்து, நாட்டின் பொருளாதார நிலை மந்தமாக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது

இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட், அதை குறிப்பிட்டு பாஜக அரசை சாடியுள்ளார். அசொக் கெலாட் டுவிட்டரில்,

”இந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும். மொத்த மதிப்பு சேர்ப்பும் (GVA) கடுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

தொடர்ந்து 5வது காலாண்டாக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. இது பொருளாதார மந்தநிலை இல்லை என்றால், வேறு என்ன?” என்று அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார்.