இந்தியாவின் ஜி.டி.பி 6 ஆண்டுகளில் இல்லாத அளவு 4.5 சதவீதமாக வீழ்ச்சி

பதிவு செய்த நாள் : 29 நவம்பர் 2019 20:29

புதுடில்லி,

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான ஜி.டி.பி-ன் வளர்ச்சி விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistical Office) இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 - 2019 நிதியாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

இந்நிலையில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில் ஜி.டி.பி 4.5 சதவீதமாக மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி ஆகும்.

கடந்த 2018ம் ஆண்டுடில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 6.9% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் கடந்த 2012 - 2013 நிதியாண்டில் தான் நாட்டின் ஜி.டி.பி. 4.3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. அதேபோல் 8 மூல நிறுவனங்களின் உற்பத்தியும் 5.8 சதவீதமாக ஆக குறைந்துள்ளது.

முக்கியமாக எரிபொருள் மற்றும் எரிசக்தி துறையில்தான் சரிவு அதிகமாக ஏற்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதம் 17.6 சதவீதம் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் துறையில் 5.1 சதவீதம் வளர்ச்சி குறைந்துள்ளது.

இயற்கை எரிவாயு துறையில் 5.7 சதவிதம் வளர்ச்சி குறைந்துள்ளது.

சிமெண்ட் உற்பத்தில் 7.7 சதவீதம் குறைந்துள்ளது.

ஸ்டீல் உற்பத்தில் 1.6 சதவீதம் குறைந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் மக்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

‘‘நாட்டில் பொருளாதார மந்த நிலை தற்போது நிலவி வருகிறது உண்மைதான். ஆனால் அது மோசமான நிலையை அடையவில்லை. பொருளாதார பின்னடைவு என்னும் நிலை உருவாகவில்லை. அது இனியும் உருவாகாது. இந்தியாவின் ஜிடிபி நன்றாகவே இருக்கிறது’’ என கூறியது குறிப்பிடத்தக்கது.


மத்திய அரசின் அதிகாரப்பூர்வ, 2018 - 2019 நிதியாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி தகவலின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. முழுமையையும் பார்வையிட கீழே கிளிக் செய்யவும்.