ஜார்கண்ட்: பா.ஜ,.ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுமா!

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2019

ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. 81 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது. அதற்கடுத்து முறையே டிசம்பர் 7,12,16,20 என மொத்தம் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் டிசம்பர் 26ம் அறிவிக்கப்படும்.

தற்போது பாரதிய ஜனதா தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அகில ஜார்கண்ட் மாணவர் யூனியனும் ஆட்சியில் பங்கேற்றுள்ளது. சென்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ,,37 இடங்களில் வெற்றி பெற்றது. ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்)வைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் பா.ஜ.,வுக்கு தாவினர். அகில ஜார்கண்ட் மாணவர் யூனியன் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது. இதுவும் பா.ஜ., ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது.

ஆனால் இந்த முறை தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. பாரதிய ஜனதா தற்போதைய முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையில் தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ., 65க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடன் தேர்தலை சந்திக்கிறது.

காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் பாபுலார் மராண்டி தலைமையிலான ஜார்கண்ட் விகாஷ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்) தனித்து போட்டியிடுகிறது.  

(தற்போதைய சட்டசபையில் கட்சிகளின் பலம் :– பாரதிய ஜனதா 37, அகில ஜார்கண்ட் மாணவர் யூனியன் 5, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 19, ஜார்கண்ட் விகாஷ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்) 8, காங்கிரஸ் 6, மற்றவை,சுயேச்சைகள் 6.)  

பீகாரில் இருந்து கனிமவளம் நிறைந்த பிராந்தியம் பிரிக்கப்பட்டு ஜார்கண்ட் என தனி மாநிலம் அமைக்கப்பட்டு 19 வருடங்கள் கடந்துவிட்டன. இதுவரை தனிக்கட்சி ஆட்சி அமைத்ததில்லை. ஐந்து வருடம் தொடர்ந்து ஆட்சி செய்த முதல்வர், தற்போதைய பா.ஜ.,வைச் சேர்ந்த ரகுபர்தாஸ் மட்டுமே. பா.ஜ.விலும் வேட்பாளர்கள் தேர்வில் பல சர்ச்சைகள் எழுந்தன. கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் அமைச்சராக இருந்தரும், மூத்த தலைவருமான சார்யு ராய், ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுயில் முதலமைச்சர் ரகுபர்தாசை எதிர்த்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த தேர்தலில் பா.ஜ,வின் கூட்டணி கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. அகில ஜார்கண்ட் மாணவர் யூனியன் தனியாக போட்டியிடுவதுடன், 15 தொகுதிகளில் நேரடியாக பா.ஜ.,வுடன் மோதுகிறது. அதே போல் சிராக் பஸ்வான் (ராம்விலாஸ் பஸ்வான் மகன்) தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சி 50 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. பீகாரில் பா.ஜ.,வுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ள நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதுவரை 25 வேட்பாளர்களின் பெயரை அறிவித்துள்ளது.  

பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் இடம் பெற்றுள்ள லோக்ஜனசக்தி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் தனித்து போட்டியிட்டாலும், இந்த கட்சிகளுக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் செல்வாக்கு இல்லாத காரணத்தால், பா,ஜ,,வுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்ற கருத்து நிலவுகிறது. அதே போல் பல்முனை போட்டியும் பா.ஜ.,வுக்கு சாதகமாகவே அமையும் என்றும் கூறுகின்றனர்.

பா.ஜ.,கூட்டணியில் இருந்து பிரிந்து தனித்து போட்டியிடும் அகில ஜார்கண்ட் மாணவர் யூனியன் தலைவர் சுதேஷ் மகாடோ கூறுகையில், “எனது கட்சி பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்தற்கு காரணம், தனி மாநிலமாக பிரிக்கும் போது அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு கொடுத்த வாக்குறுதியே. 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தவிர, மற்ற தேர்தல்களில் நாங்கள் தனித்தே போட்டியிட்டுள்ளோம். 2014ல் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதற்காக அவர்களின் (பா.ஜ.,) நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அதிகாரத்திற்காக கட்சியின் நலனை பலியிட முடியாது. முதலில் பா.ஜ., அதன் வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும். அவர்கள் எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்டனர்” என்று தெரி வித்தார்.

அகில ஜார்கண்ட் மாணவர் யூனியனுடன் கூட்டணி முறித்துக் கொண்டது பா.ஜ.,வுக்கு பின்னடைவே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அகில ஜார்கண்ட் மாணவர் யூனியனுக்கு  குர்மி ஜாதியினர், பழங்குடி மக்கள் மத்தியில் குறிப்பாக சோட்டா நாக்பூர் பிராந்தியத்தில் செல்வாக்கு உள்ளது என்கின்றனர். “ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் பா.ஜ.,வுக்கு சுலபமாக வெற்றியை தேடித்தராது. ஏனெனில் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் பா.ஜ.,வெல்ல முடியாத கட்சி அல்ல என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. பா.ஜ.., பிரசாரத்திற்கு பெரிதும் நம்பும் ராமர் கோயில், காஷ்மீர் விவகாரம், 28 சதவிகித பழங்குடிகள் வாழும் இந்த மாநிலத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்கின்றார் சென்டர் பார் ஸ்டடி டெவலப்பிங் சொசைட்டிஸ் என்ற ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார்.

 அவர் மேலும் கூறுகையில் 2014, 2019 லோக்சபா தேர்தலை விட, காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி பலமாக உள்ளது. பல கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டாலும், பா.ஜ.,வுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில்தான் பலமான போட்டி நிலவுகிறது. எனது கருத்துப்படி சுமார் 70 சதவிகித வாக்குகள் இரண்டு அணிகளுக்குள் பிரியும் என்று தெரிவித்தார்.

பாரதிய ஜனதாவை தனித்து எதிர்கொள்ளும் நிலையில் காங்கிரஸ் பலமாக இல்லை. எனவே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ஆர்.பி.என். சிங் கூறுகையில், “ எங்கள் கூட்டணி பலமாகவும், ஒற்றுமையுடனும் உள்ளது. ஆனால்  நாடு முழுவதும் பா.ஜ.,கூட்டணி சிதைந்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்த அளவில் பா.ஜ.,வை எதிர்த்து அதன் கூட்டணி கட்சிகளே போட்டியிடுகின்றன என்று கூறினார்.

காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் கூறுகையில், இந்த முறை காற்று எங்கள் பக்கம் வீசுகிறது. வேலையில்லா திண்டாட்டம், பழங்குடிமக்கள் மத்தியில் பதட்டம், நில எடுப்பு விவகாரம் போன்றவைகள் பற்றி பிரசாரம் செய்கின்றோம். நில எடுப்பு விவகாரத்தில் பழங்குடி மக்கள் வனங்களில் உள்ள அவர்களது உரிமைகளை இழக்க நேரிடும். பழங்குடிகளை விரட்டிவிட்டு வனங்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். சென்ற சட்டசபை தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டு தவறு செய்துவிட்டோம். நாங்கள் இணைந்து போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்று இருப்போம்”என்று தெரிவித்தார்.

ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ்வர் ஓரன் கூறுகையில், “மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் நாங்கள் பாடத்தைக் கற்றுக் கொண்டோம். நாங்கள் ஒன்றாக இணைந்து, ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

பாரதிய ஜனதா தலைவர் கமல் பகத் கூறுகையில், “ஜார்கண்ட் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்று கூறியதுடன், எல்லா கட்சிகளிலும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் அணி மாறுகின்றனர் என்று கூறினார்.