அரசியல் மேடை: சாதிப்பார்களா? கமல் – ரஜினி..!

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2019

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் 2021 சட்டசபை பொதுத்தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த  50 ஆண்டுகளுக்கும்  மேலாக அதிமுக, திமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தன. இந்த இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அரசியல் களத்திற்கு வந்த பல கட்சிகள் வெற்றிபெற முடியவில்லை. தனித்து நின்றும், கூட்டணி அமைத்தும், தேர்தலை சந்தித்தும், திமுகவையோ, அதிமுகவையோ தோற்கடிக்க முடியவில்லை.

1967–ம் ஆண்டு ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் தலைதூக்கவே முடியவில்லை. பின்னர் 80, 90களில் பாமக, மதிமுக, தேமுதிக என அரசியல் கட்சிகள் வந்து மாற்றத்தை கொண்டு வருகிறோம் என தேர்தலை எதிர்கொண்டனர். ஆனால், அவர்களால், அதிகபட்சம் 8, 10 சதவீத வாக்குகளை கூட பெறமுடியவில்லை.

பின்னர் தேர்தலுக்கு தேர்தல் அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்துத்தான் 5,6 எம்.எல்.ஏக்கள் வரையிலும் பெற முடிந்தது. குறிப்பாக நடிகர் விஜயகாந்த் அதிமுக, திமுகவுக்கு மாற்றான நல்லாட்சி  தருவேன் என களத்துக்கு வந்து அவர் மட்டுமே வெற்றி பெற்றார். அடுத்து வந்த தேர்தலில் அதிமுகவுடன்  கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், 29 இடங்களை பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றார்.

அடுத்து வந்த தேர்தலில் விஜயகாந்த்தை முன்னிலைப்படுத்தி, மக்கள் நலக்கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி தேமுதிக, மதிமுக, தமாக, விசிக மற்றும் கம்யூனிஸ்டுகள் என 6 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தன. ஆனால், ஒரு இடம் கூட வெற்றிபெற முடியவில்லை.

1967–ல் திமுக, அடுத்து 71ல் திமுக, அதைத் தொடர்ந்து 1977, 80, 84 என மூன்று தேர்தல்களில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக 1989ல் மீண்டும் திமுக, 91ல் ஜெ தலைமையிலான அதிமுக, 96ல் திமுக, 2001–ல் அதிமுக, 2006–ல் திமுக, 2011 மற்றும் இப்போது 2016–ல் அதிமுக எனத் தொடர்ந்து இந்த இரண்டு கட்சிகளே ஆட்சியை பிடித்து வருகின்றன. திமுக.வை வழிநடத்தி வந்த கருணாநிதி, அதிமுகவை வழிநடத்தி வந்த ஜெயலலிதா என்ற ஆளுமைமிக்க தலைவர்கள்  இல்லாத நிலையில், இந்த இரண்டு கட்சிகளும் பலம் இழந்து விட்டன. தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டு விட்டது எனக்கூறி கமல்ஹாசனும், ரஜினியும் அரசியலுக்கு வருகின்றனர். கமல் உடனடியாக கட்சி தொடங்கி நாடாளுமன்ற பொதுத் தேர்தலை சந்தித்து சுமார் 5 சதவீத அளவிற்கான வாக்குகளை பெற்றுள்ளார். ரஜினி 2021 சட்டசபை தேர்தலையொட்டி புதிய கட்சியைத் தொடங்கி தேர்தல் களம் காண திட்ட மிட்டுள்ளார்.

திமுக.வின் தலைமை பொறுப் பேற்றுள்ள ஸ்டாலின், 2019 நாடாளு மன்ற தேர்தலில் அபரிமிதமான வெற்றியைப் பெற்று, திமுகவின் வலிமையை நிரூபித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள இ.பி.எஸ், ஓ.பி.எஸ் எனும் இரட்டைத் தலைமையும் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் மிகப் பெரிய வெற்றியை பெற்று அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை என நிரூபித்துள்ளனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக, மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மிகப்பெரிய கட்டமைப்புடன், தொண்டர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் என அடர்த்தியான வாக்கு வங்கிகளுடன்  இருப்பதுதான் கள எதார்த்தம். இந்நிலையில் கமல் – ரஜினி இணைந்து அரசியல் களத்திற்கு வந்து, இரண்டு திராவிடக் கட்சிகளையும் தோற்கடித்து புதிய ஆட்சியை அமைத்து விடுவார்கள் என சில அரசியல்  நோக்கர்களும், கமல் – ரஜினியின் ஆதரவாளர்களும் பேசி வருகின்றனர்.

உலக நாயகன் என போற்றப்படும் கமல், நடிகர் திலகம் சிவாஜியாலேயே பாராட்டப் பெற்ற மிகப்பெரிய கலைஞன், அவரது நடிப்பாற்றல் பிரமிக்கத்தக்கது. அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு. ஆனால் அது தேர்தல் வெற்றிக்கு உதவாது என்பதை நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தெளிவுப்படுத்தி விட்டது.

அதே போல ரஜினி அவர்களும் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக இன்றளவும் ஜொலித்துக் கொண்டிருக் கிறார். அவருக்கும் நாடு தழுவிய  அளவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவரது ஸ்டைலை, நடிப்பை பலரும் ரசிக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் இவை எல்லாம் வாக்குகளாக மாறுவதற்கு வழியில்லை என்பதுதான் கள எதார்த்தம்.

தமிழ்நாட்டில் ‘சிஸ்டம்’ சரி யில்லை என்று கூறி, இப்போது அரசியலுக்கு வருவதாக கூறியுள்ள ரஜினியின் அறிவிப்பு கடந்த கால் நூற்றாண்டுகளாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்திருந்த அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கலாம். அவர்களது ‘அரசியல்’ ஆசைகளுக்கு தீனி போடலாம். ஆனால், பொது வெளியில், மக்கள் மத்தியில் ரஜினிக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றுதான் தெரிகிறது.

இன்றைய அரசியல் நடைமுறை, தேர்தல் அணுகுமுறை எப்படிப்பட்டது என்பதை ரஜினியும் அவரை அரசிய லுக்கு அழைத்து வரத்துடிக்கும் பிரமுகர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஏற்கனவே திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என மார் தட்டி வந்த கட்சிகளின் நிலைமையும் புரியும், ஆனாலும் ஏதோ ஒரு நப்பாசையில், ரஜினியே நம்புவது போல அதிசயமோ, அற்புதமோ நடக்கும் என்ற குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் அரசியல் களத்திற்கு வருகிறார்கள். எந்த அதிசயமும், அற்புதமும் நடக்கப் போவதில்லை. கமல் – ரஜினி இருவரும் இணைந்து வேறு எந்தக் கட்சியோடும் கூட்டணி அமைக்க கமல் தேர்தல் களம் கண்டால் சுமார் 10லிருந்து 15 சதவீதம் வாக்குகள் வரையிலும் பெறலாம். உடனே வெற்றி, அறுதி பெரும்பான்மை என்பதெல்லாம் நடக்கவே வாய்ப்பில்லை என்பதுதான் இன்றைய தமிழக அரசியல் கள எதார்த்த நிலை. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினால் திமுக அணி ஆட்சியை பிடிக்கும். அதிமுக ஆட்சி தொடர விரும்பினால் 2011, 2016–ஐ தொடர்ந்து 2021–லும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமையும். மக்கள் தீர்ப்பு என்ன என்பதை அப்போது பார்ப்போம்.