துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 57

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2019

முதலாம் உலகப்போர்

தண்ணீரை மையமாக கொண்டு மூன்றாம் உலகப் போர் வருவதற்குக்கூட வாய்ப்பு உள்ளது என்ற மிரட்டலான கருத்து உலா வருகிற இந்த நேரத்தில் உலகையே உலுக்கி எடுத்த முதலாம் உலகப்  போர் எப்படி மூண்டது. எத்தகைய விளைவுகளை அது உருவாக்கியது என்பது குறித்து இந்த வாரம் பார்ப்போம்.

1914–ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 1918–ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் முதலாம் உலகப்போர் நடைபெற்றதாக நமக்கு வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.இந்த உலகப் போரின்போது பல்வேறு நாடுகளின் தரைப்படை,விமானப்படை, கடற்படை என்ற முப்படைகளும் மோதியுள்ளன. இந்த கடும் போரின் விளைவாக, 80 லட்சம் வீரர்கள் உயிரிழந்ததாகவும், சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.  அதுமட்டுமல்ல, இந்த போரில் ஈடுபட்ட நாடுகளில் இருந்த பல்வேறு நகரங்கள், கிராமங்கள் அந்த பகுதிகளில் இருந்த தொழிற்சாலைகள்,பாலங்கள், அணைகள், காடு கழனிகள் என பலவும் முற்றாக  அழிந்துள்ளன. இந்த போரில் தோற்ற நாடுகள் மட்டுமல்ல, வெற்றி பெற்ற நாடுகளும் கூட பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளன. நாடு பிடிக்க வேண்டும் என்ற ஆசையும் தங்கள் ராஜ்யத்தை, ஆட்சி  அதிகாரத்தை விரிவு படுத்த வேண்டும என்ற பேராசையும்தான் முதல் உலகப்போர் தொடங்க காரணமாக இருந்தள்ளது.

வல்லரசு நாடுகள், தங்கள் வணிகத்தையும், வளத்தையும் பெருக்கும் நோக்கோடு, சுயநலச்  சிந்தனையோடு செயல்படத் தொடங்கிய 20–ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசுகளின் சமநிலை சீர்குலையத் தொடங்கியது. வல்லாதிக்க மனப்பான்மை கொண்ட நாடுகள் ஒன்றிணையத் தொடங்கின.

ஜெர்மனி, ஆஸ்திரிய நாட்டுடன் நட்புக் கொண்டது. இதை கண்டு அஞ்சிய பிரான்ஸ் தேசம் ரஷ்ய நாட்டுடன் ஒன்று சேர்ந்தது. இவர்கள் தங்களின் படை பலத்தை பெருக்கினர். 1914–ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள், இரு பிரிவுகளாக அணி வகுத்தன. ஒரு புறம் ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி. மறுபுறம் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா எனக் கை கோர்த்து நின்றன. இந்த இரு பிரிவு  நாடுகளிடையே நாளுக்கு நாள் பகையும், பொறாமையும் வளர்ந்தன.  அப்போதே போர் மேகம் சூழ்ந்தது. எந்த நேரமும் சண்டை மூளலாம் என்ற அச்சநிலை உருவாகியது. இந்த நேரத்தில்தான், (1914 ஜூன் 28) சர்பியா நாட்டைச் சேர்ந்த ஒரு நபர், ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பட்டத்து இளவரசரையும், அவரது மனைவியையும் சுட்டுக்கொன்று விடுகிறார். இது ஆஸ்திரியா நாட்டினரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. இது தொடர்பாக சர்பியாவுக்கு விடுத்த எச்சரிக்கையும், விதிக்கப்பட்ட நிபந்தனைகளும் பலனளிக்காத நிலையில் சர்பியாவின் மீது ஆஸ்திரியாவும் –ஹங்கேரி நாடும் இணைந்து படையெடுத்தது. இதுதான் முதல்  உலகப்போரின் தொடக்கம்.

1914–ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த போர் தொடங்கப்பட்டபோது. சர்பியாவுக்கு எதிராக ரஷ்யா களம் இறங்கியது. இதை அறிந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுடன் சேர்ந்து ரஷ்யா மீது படை எடுப்பதாக அறிவித்தது. முதலாவதாக ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த பிரான்ஸ் நாட்டை தோற்கடிப்பதற்காக ஜெர்மனி திட்டமிட்டு தமது படையை அனுப்பியது. இதை எதிர்கொள்வதற்காக பிரான்ஸ் தேசம், தமது போர் வீரர்கள் 20 ஆயிரம் பேரை கிழக்கு போர்முனைக்கு அனுப்பி வைத்தது. ஜெர்மானிய வீரர்கள், பெல்ஜியம் வழியாக செல்வதற்கு அந்நாடு அனுமதி வழங்க வேண்டும் என அந்நாட்டிடம் வேண்டுகோள் விடுத்தது. இதை பெல்ஜியம் அனுமதிக்காததால், அந்நாட்டின் மீதும் ஜெர்மனி போர் தொடுத்தது. உடனே பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிராக பிராஸ்சுடன் சேர்ந்து கொண்டது. இப்படி மாறி, மாறி போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிற உலக நாடுகளின் சமாதானம் எடுபடவில்லை. இந்த போரின் தொடக்க காலத்தில் மூன்று பெரும் போர் முனைகள் அமைந்தன. மேற்கு முனை இங்கிலீஸ் கால்வாய் முதல் சுவிட்ஸர்லாந்து வரையில் நீடித்திருந்தது. இந்த பகுதியில் மூன்று ஆண்டுகள் கடும் போர் நிகழ்ந்தது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மடிந்தனர்.

கிழக்கு போர் முனை என்பது மிகப் பெரியது. போர் எல்லா மத்திய வல்லரசு நாடுகளின் கிழக்கு எல்லைகளின் வழியாக அமைந்தது. பால்டிக் கடற்பகுதியின் ரீகா என்ற இடத்திலிருந்து கருங்கடல் வரையிலுமான ஆயிரத்து 125 மைல் நீளம் கிழக்கு போர் முனை அமைந்த்து. இந்த உலக யுத்தத்தில் இத்தாலி நாடும் 1915–ல் ஈடுபட்டதால், புதிதாக மூன்றாம் போர்முனை ஒன்றும் உருவாகியது.  இது சுவிட்சர்லாந்திலிருந்து இத்தாலியின் எல்லைப்புறம் வழியா ‘டிரீஸ்ட்’ என்ற பகுதி வரையிலும் சுமார் 320 மைல் நீளம் கொண்டது. இங்கு நடைபெற்ற போர் முடிவதற்குள் தென்பால்கன் பிரதேசங்கள் வழியாக சுமார் 300 மைல்கள் கொண்ட மற்றொரு போர் முனையும் அமைந்தது.

ஜெர்மன் படைக்கும், பிரெஞ்சுப் படைக்கும் இடையேதான் கடுமையான போர் நிகழ்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஜெர்மானியப் படையினர் நச்சுப்புகையை  பயன்படுத்தி பிரெஞ்சுப் படையினரைத் தோற்கடித்து முன்னேறியுள்ளனர். ஆனாலும், பிரெஞ்சுப்படையினர் கடுமையாக எதிர்த்துப் போராடி,  ஜெர்மானியப் படையினரை பின்வாங்கச் செய்துள்ளனர். 1915–ல் பல்கேரியா நாடும், இத்தாலியும், 1916–ல்  ருமேனியாவும்,தங்கள் உறவு நாடுகளுடன் சேர்ந்து போர் புரியத் தொடங்கியுள்ளனர். 1917–ம் ஆண்டு ரஷ்ய நாடு மன்னர் ஆட்சியில் இருந்து விடுபட்ட நிலையிலும், போரை கைவிடவில்லை.

1918–ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெர்மனியும் –ரஷ்யாவும் சமாதான உடன்படிக்கை செய்த போதும் அது நீடிக்கவில்லை. நிலைக்கவில்லை. உடன்படிக்கையை முறித்துக்கொண்ட ஜெர்மன் மூர்க்கத்தனமாக போரைத் தொடங்கியது. பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச படையினருக்கு எதிராகவும் ஜெர்மன் கடும் போரில் ஈடுபட்டது. அதே 1918 ஆகஸ்ட் மாதம் பிரெஞ்சுப் போர் முனையில் அமெரிக்கப்படை நுழைந்து ஜெர்மானியப் படைகளை நெருக்கினர். இந்த போரில் ஜெர்மானிய  படை பின் வாங்கியது. பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மன் கப்பற்படைகளும், விமானப்படைகளும் கூட இந்த போரில் ஈடுபடுத்தப்பட்டன. 1915 வரையிலும் விமானம் மூலம் குண்டு வீச்சுக்கள் நடைபெற்று ராணுவத் தளவாட உற்பத்திச் தொழிற்சாலைகள், ரயில் பாதைகள், பாலங்கள், போர்ப் பாசறைகள் அழிக்கப்பட்டன. ஏராளமான உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்ட நிலையில், ஒரு வழியாக 1918–ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

அதை தொடர்ந்து 1919–ம் ஆண்டு ஜூன் மாதம் 28–ம் தேதி  ‘வர்சேல்ஸ்’ சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி சர்வதேச சங்கம் ஒன்றும் நிறுவப்பட்டது. இதன் மூலம் உலகில் சமாதானம் நிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் 20 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது உலக யுத்தமும் தொடங்கி விட்டது.  அதை பின்னர் காண்போம்.