கூகுள் பயன்படுத்தும் 500 இந்தியர்களின் கணக்குகளில் அரசு ஆதரவுடன் உள் நுழைந்து சட்ட விரோத தேடுதல் வேட்டை

பதிவு செய்த நாள் : 27 நவம்பர் 2019 21:06

மும்பை

இணையதள தேடுதல் கருவியான கூகுளைப் (Google) பயன்படுத்தும் 500 இந்தியர்களின் ஈமெயில்களில் இந்திய அரசு ஆதரவுடன் இயங்கும் அமைப்புகள் உள்நுழைந்து அவர்களின் பாஸ்வேர்டுகள், வங்கிக்கணக்கு தொடர்பான பாஸ்வேர்டுகள், கூகுள் பயன்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ள முயற்சி நடந்ததாக கூகுள் நிறுவனத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமாக கூகுள் திரட் அனாலிசிஸ் குரூப் (Google's Threat analysis group) என்ற பிரிவு இயங்கி வருகிறது. இந்தப் பிரிவு உலகிலுள்ள 149 நாடுகளில் கூகுள் தேடுதல் எந்திரத்தை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் அபாயங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு தொடர்ந்து ஆய்வு, .கண்காணிப்பு, .மற்றும் உஷார் படுத்துதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அபாய தடுப்பு பிரிவின் சார்பில் செய்தி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

உலகெங்கும் 149க்கு மேற்பட்ட நாடுகளில் 12,000க்கு மேற்பட்ட கூகுள் தேடுதல் எந்திரத்தை பயன்படுத்துவோரின் கணக்குகளில் உள் நுழைய முயற்சி நடைபெற்றுள்ளது. இந்த சந்தர்ப்பங்களின் போதெல்லாம் கூகுள் அபாயத் தடுப்பு பிரிவின் சார்பில் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக கூகுளின் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எச்சரிக்கை அனுப்பப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்தியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட கூகுள் தேடுதல் எந்திரத்தை பயன்படுத்துவோரின் கணக்குகளில் உள்நுழைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசு ஆதரவுடன் சில அமைப்புக்கள் இந்த முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களுக்கும் கூகுள் அமைப்பின் சார்பில் எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. உங்கள் கணக்குகளில் உள்நுழைந்து பாஸ்வேர்டுகள், வங்கி கணக்குகள் தொடர்பான பாஸ்வேர்டுகள், ஆய்வு செய்யும் இணையதளங்கள் தொடர்பான. தகவல்கள், இ மெயில்கள் ஆகியவற்றை திருட முயற்சிகள் நடந்துள்ளன என எச்சரிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு நடந்த முயற்சிகளின் எண்ணிக்கை சீனாவை விட இந்தியாவில் அதிகம். அமெரிக்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளில் உள்நுழைய முயற்சிகள் நடந்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தமட்டில் 500க்கும் மேற்பட்ட கணக்குகளில் நுழைந்து உளவு பார்க்கவும் திருடவும் முயற்சிகள நடந்துள்ளன.

பாகிஸ்தான், வியட்நாம், லாவோஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் 500 முதல் ஆயிரத்துக்கும் அதிகமான கூகுள் கணக்குகளில் உள்நுழைய முயற்சிகள் நடந்துள்ளன.

பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் அமைப்புகள் சார்பாக பிரச்சாரங்களை மேற்கொள்வோரைக் குறிவைத்து  இணையதள கணக்குகளில் உள் நுழைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகையவர்கள் பற்றிய விவரங்களை காப்பாற்ற கூகுள் எப்பொழுதும் முயற்சிகளை மேற்கொள்கிறது.

உயர்ந்த அபாயத்துக்கு உரிய பிரிவிலுள்ள இவர்களுக்கு கூகுள் அமைப்பின் சார்பில் எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன. மேலும் அவர்களை கூகுளின் அட்வான்ஸ் புரோடக்சன் புரோகிரம் (Advance protection program) அமைப்பில் சேரும்படி கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன .

இந்த அமைப்பில் சேர்வோருக்கு கூகுள் நிறுவனம் மிகவும் வலுவான பாதுகாப்பு வழங்குகிறது. இத்தகைய உயர் அபாயம் உள்ள கணக்குகளை காப்பதற்கு கூகுள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூகுள் ஆய்வாளர் ஷேன் ஹன்ட்லி  தன்னுடைய இணையதள பிளாக் ஸ்பாட்டில் தெரிவித்துள்ளார்.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் அறிவுசார் சொத்து உரிமைகளை திருடி பயன்படுத்துவதற்காக இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வது உண்டு என கூகுள் அறிவித்துள்ளது.

சமீபத்தில் இதேபோன்ற சம்பவம் முகநூலை பயன்படுத்துவோருக்கு இந்தியாவில் நடந்தது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஒரு கம்பெனி, பேகஸ் என்ற இணையதள உளவுத் தொற்று மூலம் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கணக்குகளை உளவு பார்த்ததாக தகவல் வெளியானது. .முகநூல் அமைப்பு இதன் தொடர்பாக எச்சரிக்கைகளை சம்பந்தப்பட்ட முகநூல் வாடிக்கையாளருக்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.