மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 19

பதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2019

ஒரு நாள் மற்றவர்கள் வருவதற்கு முன் ஏவி.எம். ராஜன் ஒத்திகைக்கு வந்துவிட்டார். அப்போது வாலி குளித்துவிட்டு, விஸ்வநாதன் – ராமமூர்த்தியோடு பாட்டு எழுதுவதற்காக ஒரு கம்பெனிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

 நாடகத்திற்கான பெரும்பகுதி வசனங்களை தான் மனப்பாடம் செய்துவிட்டதாகவும், அதை தன்னோடு உட்கார்ந்து சரிபார்த்து கொள்ள விரும்புவதாகவும் ராஜன், வாலியிடம் சொன்னார்.  இங்கே ஏவி.எம். ராஜனைப் பற்றி சொல்லியாக வேண்டும். வாலி நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோதே, ராஜன் திரைப்படத்தில் நன்கு பிரபலமாகிவிட்ட கதாநாயகன்.  

இருந்தாலும், வாலியின் வேண்டுகோளுக்கிணங்கி நாடகத்தில் நடிக்க வந்திருந்தார். அவர் ஒரு பட்டதாரி. பண்பாளர். படத்திற்கு வருவதற்கு முன் கவர்னர் மாளிகையில் பணிபுரிந்தவர். வயலின் வாசிப்பதில் வித்வானாகத் திகழ்ந்த ராஜமாணிக்கம் பிள்ளையின் நெருங்கிய உறவினர். அனைத்துக்கும் மேலாக சிறந்த மனிதர். எப்பொழுதும் புன்னகை மன்னனாக திகழ்பவர். அப்படிப்பட்டவர் வாலி சொன்ன ஒரு செய்தியைக் கேட்டு, கோபத்தின் உச்சிக்குச் சென்றார்.

 வாலி சொன்ன செய்தி இதுதான்  `நாடகம் போடுவதை நான் நிறுத்திவிட்டேன். எனவே, இனி ஒத்திகை இல்லை. இவ்வளவு நாள் என் அழைப்பை ஏற்று, ஒத்திகைக்கு வந்த உங்களுக்கு என் நன்றி’

உடனே ஏவி.எம்.ராஜனுக்கு கோபம் வந்தது. ` கவிஞரே! உமக்காக, நான் படப்பிடிப்பையெல்லாம் மாற்றி அமைத்துக்கொண்டு நாடக ஒத்திகைக்கு வந்தேன். இப்போ நாடகத்தை நிறுத்தி விட்டேன்னு சொன்னா என்னய்யா அர்த்தம்? நானெல்லாம், வேலை வெட்டி இல்லாதவன்னு நெனைச்சீரா நீர்?’ என்று வாலியை ஒரு ‘பிடி’ பிடித்து விட்டார். வாலி அவரை சமாதானப்படுத்தினார்.  `

இத பாருங்க ராஜன்! நாடகத்தில கதாநாயகியா நடிச்சுக்கிட்டிருந்த பொண்ணு, கல்யாணம் பண்ணிக்க போறா. இனிமே, அவ நாடகத்தில நடிக்க முடியாது. வேறு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, நாடகம் போட எனக்கு இஷ்டமில்லை. சிரமத்துக்கு மன்னிக்கணும்’ என்றார் வாலி.

`அந்தப் பொண்ணு யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா உமக்கென்னய்யா?’ என்று சத்தம் போட்டார் ராஜன். ` அந்தப் பொண்ணு என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறா’ என்று வாலி சொன்னவுடன், கோபத்தை மறந்து ஏவி.எம்.ராஜன் குழந்தை போல் சிரித்தார்.

‘உண்மையாகவா?’

‘ஆமாம்.’

‘வாழ்க! வாழ்க! என்று வாழ்த்திவிட்டுப் போய்விட்டார்’ ராஜன். கல்யாணத்திற்கான சத்திரத்தைக் கீழத் திருப்பதியில் ஏற்பாடு செய்ய, வாலியும் அவரது நண்பர் நடிகர் வி. கோபாலகிருஷ்ணனும், காரில் புறப்பட்டார்கள்.

 கோபிதான் காரை ஓட்டிக்கொண்டு போனார். ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடி வந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.  குழந்தையின் தாய் பரபரப்போடு ஓடி வந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள்.

வாலியும், கோபியும் வண்டியை விட்டு இறங்கி `குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடி வந்ததனால்தான், இப்படி ஆனது. இதுல எங்க தவறு எதுவுமில்லே, இருந்தாலும், பெரிய மனசு பண்ணி நீங்க மன்னிக்கணும்’ என்று குழந்தையின் தாயிடம் சொன்னார்கள்.

அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக் கூட்டி விவகாரம் செய்யாமல் அவர்களை அனுப்பி வைத்தார்கள். ` வாலி, இப்படி ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சே. மறுபடியும் மெட்ராசுக்கே திரும்பிடலாமா?’ என்றார் கோபாலகிருஷ்ணன்.

`ஏன்? இதனால் என்ன?’ என்றார் வாலி. `கல்யாணத்திற்கு இடம் பார்க்கப்போறோம். சகுனமே சரியாகயில்லையே’ என்றார் கோபி.  `எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கல்யாணத்துல கடவுளுக்கு இஷ்ட மில்லேன்னாதான் நடக்காது. மத்தபடி, இது மாதிரி விஷயங்கள்ல நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என்றார் வாலி. கோபி, மவுனமாக காரை ஓட்டிக்கொண்டு சென்றார்.

இருபுறமும் அறுவடை முடிந்த நிலையில் வயல்வெளிகள், நடுவிலே காயப்போட்ட கோவணம் போல், ரோடு நீளமாகப் போய்க்கொண்டிருந்தது.  திடீரென்று வயல்வெளி யில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, வாலை சிலிர்த்துக்கொண்டு பாதையின் குறுக்கே ஓடி வந்தது.  அதன்மீது கார் மோதாமலிருக்க கோபி பிரேக்கின் பெடலை அமுக்க, எதிர்பாராமல் வண்டி நிலைகுலைந்து பாதையை விட்டு வயக்காட்டில் இறங்கி ஒரு குலுக்கலோடு நின்றது. வாலிக்கும், கோபிக்கும் உச்சந்தலையிலும், முன் நெற்றியிலும் லேசான சிராய்ப்புக்கள்.

‘சகுணம் சரியில்லே, வாங்க வாலி. ஒழுங்கா நாம் மெட்ராசுக்கே திரும்பிவிடலாம்’ என்றார் கோபி.  வயக்காட்டில் வேலை செய்து கொண்டிர்ந்தவர்கள் துணையோடு, அவர்கள் கார் பள்ளத்தாக்கிலிருந்து பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.  `இப்போதைக்கு உங்க கல்யாணத்தை தள்ளிப் போட்டுடுங்க. ஒண்ணு ஒண்ணா தடங்கள் வந்துக்கிட்டேயிருக்கும்’ என்றார் கோபி.

வாலி அதற்கு உடன்படவில்லை. `கோபி, எண்ணித் துணிஞ்சாச்சு. துணிஞ்சப்புறம் எண்றதே இழுக்கு. கல்யாணம் ஏப்ரல் ஏழாம் தேதி. திருச்சானூர் சத்திரத்துல நடந்தே தீரணும். என் முடிவே நான் மாத்திக்கறதா இல்ல. நீங்க வராட்டி, நான் நடந்தே திருப்பதி போயிடுவேன்’ என்று சொன்னதும் கோபி சிரித்துவிட்டுப் பேசினார். ` ஏப்ரல் ஏழாம்தேதி சத்திரம் கிடைக்கலேன்னா?’

`அப்ப, இந்த கல்யாணத்த தள்ளிப்போட கடவுள் விரும்புறார்ன்னு நினைப்பேன்.’ வாலியின் உறுதியைப் பாராட்டி கோபி, திருப்பதியை நோக்கிக் காரை செலுத்தினார். கோபி, சொன்னது உண்மைதான். கீழத்திருப்பதி, திருச்சானூர்க் கோயில் கல்யாணம் மண்டபம் அவ்வளவு சுலபமாக கிடைக்கக்கூடிய இடமல்ல. காரணம், ஏகப்பட்ட முகூர்த்தங்களுக்கான மாதம் அது. மூன்று மாதங்களுக்கு முன்ன தாகவே பலர் ரிசர்வேஷன் செய்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.

 திருப்பதி தேவஸ்தான பேஷ்கார் கோபிக்கு மிக நெருங்கிய நண்பர். கீழத்திருப்பதியில் குடியிருந்த அவர் வீட்டுக்குப் போய் விவரத்தைச் சொன்னார்கள்.  `ஏப்ரல் ஏழுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது. இப்போது கேட்டால் எப்படி? கண்டிப்பாக கல்யாண மண்டபத்தை ஏற்கனவே யாராவது பதிவு செய்யப்பட்டதாக இருக்கும் என்று ஆங்கிலத்தில் சொன்னார் கோயில் பேஷ்கார்.  

‘டெலிபோன் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்’ என்று பேஷ்காரிடம் வேண்டினார் கோபி. திருச்சானூர் கோயில் நிர்வாக அதிகாரியோடு போனில் பேசிவிட்டு பேஷ்கார் சொன்னார்– ‘‘எல்லா முகூர்த்த நாட்களும் இன்னும் மூன்று மாதத்திற்கு புக் ஆகிவிட்டது.. ஆனால் கடவுள் சித்தம். ஏப்ரல் ஏழாம்தேதி காலியாயிருக்கு.’’  உடனே வாலி கோபி யிடம் சொன்னார். `இதுதான் கடவுள் விருப்பம் என்பது!’  ஏப்ரல் 7, 1965ல் வாலி திருமணம் திருச்சானூரில் நடந்தது.

(தொடரும்)