பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 1–12–19

பதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2019

செய்­தி­க­ளைப் பார்க்­கி­றேன். டிசம்­பர் மாதம் வந்­து­விட்­டாலே சென்னை வாசி­க­ளுக்­கும், தமி­ழ­கத்­தின் சினிமா ரசி­கர்­க­ளுக்­கும் இரண்டு விஷ­யங்­கள்­தான் நினை­விற்கு வரும். ஒன்று சங்­கீத சீசன். அடுத்­தது, ரஜி­னி­காந்­தின் பிறந்த நாள்.

 இப்­போதே ரஜி­னி­யின் பிறந்த நாளை எதிர்­பார்த்து, அவரை வாழ்த்­தி­யும், கிண்­ட­ல­டித்­தும் பதி­வு­கள் வர ஆரம்­பித்­து­விட்­டன. ஆனால், என்­னைப் போன்ற பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு டிசம்­பர் என்­றால் மறைந்த குமு­தம் ஆசி­ரி­யர் எஸ்.ஏ.பி. அண்­ணா­ம­லை­யின் நினைவு நாளும், எங்­கள் முன்­னாள் ஆனந்த விக­டன் ஆசி­ரி­யர் எஸ்.பால­சுப்­ர­ம­ணி­யன் நினை­வும் தான் வரும். ரஜி­னி­காந்த் பிறந்த தேதியை நினை­வு­ப­டுத்­தும் போது எனக்கு குமு­தம் ஆசி­ரி­யர் எஸ்.ஏ.பி யின் நினை­வு­தான் வரும்.   டிசம்­பர் 12ம்தேதி­தான் அவ­ரு­டைய பிறந்த நாள். ஒரு பத்­தி­ரி­கையை எப்­ப­டி­யெல்­லாம் மக்­க­ளுக்கு ரச­னை­யோடு கொண்டு போக­லாம் என்­ப­தற்கு உதா­ர­ண­மாக திகழ்ந்­த­வர். செல்­வச் செழிப்­பில் பிறந்த செட்­டி­நாட்­டுக்­கா­ரர். எம்.ஏ. பி. எல் பட்­ட­தாரி. ஆனால், வக்­கீல் தொழி­லுக்கு போகா­மல் பத்­தி­ரிகை தொழி­லுக்கு வந்­த­வர் எஸ்.ஏ. பி. அவர் குமு­தம் பத்­தி­ரி­கையை 1949களில் துவக்­கி­ய­வர்.  அப்­போ­து­தான் வாரப் பத்­தி­ரி­கை­க­ளில் ஆனந்த விக­டன்­தான் கோலோச்­சிக் கொண்­டி­ருந்­தது. அவர் பத்­தி­ரி­கையை துவக்­கி­ய­போது, பெரும்­பா­லான படித்த பிரா­மண வீடு­க­ளில் இரண்­டு­வித தடை­கள் இருந்­தன. ஒன்று, எம்.ஜி.ஆர்., படங்­கள் பார்க்­கக்­கூ­டாது. அடுத்­தது, குமு­தம் பத்­தி­ரி­கையை வாங்­கக்­கூ­டாது என்­ப­து­தான்.  கார­ணம், அப்­போது குமு­தம் பத்­தி­ரி­கை­யில் வந்த அழ­கி­க­ளின் கவர்ச்சி படங்­கள்.  சினிமா நடி­கர்­க­ளின் அந்­த­ரங்க வாழ்க்­கையை மறை­மு­க­மாக சொல்­லும் செய்­தி­கள். கிசு­கிசு என்­கிற வார்த்­தையே இந்­தப் பகு­தி­யி­னால்­தான் தமிழ் மக்­க­ளி­டையே உலவ ஆரம்­பித்­தது.

 ஆனால், காலப்­போக்­கில் மக்­கள் குமு­தம் பத்­தி­ரி­கைக்கு அடி­மை­யா­கிப் போனார்­கள் என்றே சொல்­ல­லாம். அதில் வரும் ஒவ்­வொரு தொட­ருக்­கா­க­வும் மக்­கள் ஒவ்­வொரு வார­மும் காத்­துக்­கொண்­டி­ருப்­பார்­கள். கவர்ச்சி மூல­மாக மக்­க­ளி­டம் பல உயர்ந்த கருத்­துக்­களை கொண்டு சென்­ற­வர் அம­ரர் எஸ்.ஏ. பி. அரசு பதில்­கள் என்­கிற அவ­ரது கேள்வி, பதில் பகு­திக்கு லட்­சக்­க­ணக்­கில் ரசி­கர்­கள் இருந்த காலம் அது. அந்த கேள்வி பதில்­க­ளில் கிண்­டல், கேலி, சினிமா விஷ­யங்­கள் இருந்­தா­லும், பல உயர்ந்த விஷ­யங்­களை, இலக்­கி­யங்­களை, மேதை­களை அந்­தப் பகுதி மூல­மாக மக்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர் அவர். ஒரு நான்கு பேரை மட்­டும் ஆசி­ரி­யர் இலா­கா­வில் வைத்­துக் கொண்டு ஒரு பத்­தி­ரி­கை­யின் விற்­ப­னையை ஆறு லட்­சம் பிர­தி­க­ளுக்கு கொண்டு போன­வர்.  குமு­தம் என்­றால் எஸ்.ஏ.பி. ரா.கி.ரங்­க­ரா­ஜன், ஜ.ரா. சுந்­த­ரே­சன், புனி­தன் என்ற நான்கு கதர்­வேட்டி சட்டை கட்­டிய  எளி­மை­யா­ன­வர்­கள் தான். `ஒரு சிறந்த பத்­தி­ரிகை ஆசி­ரி­ய­ரின் திறன் என்­பது அவர் எவ்­வ­ளவு எழு­து­கி­றார் என்­ப­தில் இல்லை. அவர் எத்­தனை எழுத்­தா­ளர்­களை உரு­வாக்­கு­கி­றார் என்­ப­தில்­தான் இருக்­கி­றது’ என்­பார் ஆனந்த விக­டன் அதி­பர் எஸ்.எஸ். வாசன்.  அதற்கு உதா­ர­ண­மாக திகழ்ந்­த­வர் அம­ரர் எஸ்.ஏ.பி. ஆனந்த விக­டன் ஆசி­ரி­யர் பால­சுப்­ர­ம­ணி­யன்.

 தமிழ் எழுத்­து­லக மேதை அம­ரர் கல்கி, எஸ்.எஸ். வாச­னின் கண்­டு­பி­டிப்பு. சுஜாதா என்­கிற அற்­புத எழுத்­தா­ளரை இனங்­கண்டு பிடித்­த­வர் அம­ரர் எஸ்.ஏ.பி.  எழுத்­து­ல­கின் முடி­சூடா மன்­னன் ஜெய­காந்­தன் மக்­க­ளி­டம் பிர­ப­ல­மா­னதே ஆனந்த விக­டன் வெளி­யிட்ட அவ­ரது முத்­திரை கதை­க­ளி­னால்­தான்.  ஆனந்த விக­டன் எழுத்­தா­ளர்­க­ளுக்கு அள்­ளிக் கொடுக்­கும். அந்த விஷ­யத்­தில் குமு­தம் கிள்­ளிக் கொடுக்­கும். ஒவ்­வொரு குமு­தத்­தி­லும் வாச­கர்­க­ளுக்கு ஏதா­வது ஒரு வியப்பு காத்­தி­ருக்­கும். சமூ­கத்­தில் எதி­ரும் புதி­ரு­மான இருந்த பிர­ப­லங்­களை சந்­தித்து பேச வைப்­பார்­கள்.  உதா­ர­ண­மாக வாரி­யார் சுவா­மி­கள் தீவிர ஆன்­மிக வாதி. நடி­க­வேள் எம்.ஆர். ராதா தீவிர நாத்­தி­கர். இரு­வ­ரை­யும் சந்­தித்து உரை­யாட வைக்­கும் குமு­தம். சில்க் ஸ்மிதா பிர­ப­ல­மா­ன­போது, அவரை வைத்து வாச­கர்­க­ளுக்கு தெலுங்கு கற்­றுக் கொடுக்க வைத்­தது குமு­தம். குமு­தத்தை வசை பாடிக்­கொண்­டே­யா­வது வாச­கர்­கள் குமு­தத்தை படிக்க வைக்க வேண்­டும் என்­கிற வியா­பார தந்­தி­ரத்தை அறிந்து வைத்­தி­ருந்­த­வர் எஸ்.ஏ. பி. குமு­தம் ஆசி­ரி­யர் இலா­கா­வில் இருந்த நால்­வ­ரின் முகம் யாருக்­குமே தெரி­யாது. குமு­தம் ஆசி­ரி­ய­ரின் படத்தை வாச­கர்­கள் கண்­டதே 1980களில் ஆனந்த விக­டன் பொன்­வி­ழா­வின் போது­தான்.  சினிமா விமர்­ச­னம் என்­றால் ஆசி­ரி­யர் இலா­கா­வி­னர், தியேட்­ட­ருக்கு போய் வரி­சை­யில் நின்று டிக்­கெட் வாங்­கிக் கொண்­டு­தான் படம் பார்த்து எழு­து­வார்­கள்.

 அந்த விமர்­ச­னங்­க­ளில்­தான் எத்­தனை கிண்­டல்! உதா­ர­ண­மாக எம்.ஜி.ஆர்., சரோ­ஜா­தேவி நடித்து தேவர் பிலிம்ஸ் தயா­ரிப்­பில் வெளி­யான படம் நீதிக்­குப்­பின் பாசம். இந்த படத்­தின் விமர்­ச­னத்­தின் முடி­வில் ‘நீதிக்­குப் பின் பாசம் பாதிக்­குப் பின் மோசம்’ என்று எழு­தி­யது குமு­தம். எழுத்­தா­ளர் சிவ­சங்­க­ரின் பிர­ப­ல­மான நாவல் நண்டு. இந்­தக் கதை வட­நாட்­டில் நடக்­கிற மாதி­ரி­யான கதை. இந்த நாவல் இயக்­கு­நர் மகேந்­தி­ரன் இயக்­கத்­தில் பட­மாக வந்­தது. அதில் ஏரா­ள­மான இந்தி வச­னங்­கள் வரும். அப்­போது தயா­ரிப்­பா­ள­ரும், நடி­க­ரு­மான கே. பாலாஜி இந்­தி­யின் வெற்றி பெற்ற படங்­க­ளின் உரி­மையை வாங்கி தமி­ழில் சிவா­ஜியை வைத்து பட­மாக்கி வெற்றி பெற்று கொண்­டி­ருந்­தார். ‘நண்டு’ படத்­திற்கு விமர்­ச­னம் எழு­தும்­போது `இந்­தப் படத்­தில் இன்­னும் ஒன்­றி­ரண்டு காட்­சி­க­ளில் இன்­னும் அதி­க­மாக இந்தி வச­னங்­களை சேர்த்­தி­ருந்­தால், இந்த படத்­தின் உரி­மையை பாலாஜி வாங்கி தமி­ழில் எடுத்­தி­ருப்­பார்’ என்று கிண்­ட­ல­டித்­தது.

 சதா சர்­வ­கா­ல­மும் பத்­தி­ரி­கை­யைப் பற்­றியே நினைத்­துக் கொண்­டி­ருந்­த­வர் எஸ்.ஏ. பி. அவ­ரைப் போன்ற படிப்­பா­ளி­களை தமிழ் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர் உல­கம் கண்­ட­தில்லை என்று சொல்­ல­லாம். எத்­தனை பக்க புத்­த­க­மா­னா­லும் அதை வாங்­கிய ஒன்­றி­ரண்டு நாட்­க­ளில் படித்து முடித்­து­விட்டு அந்த புத்­த­கத்­தைப் பற்றி கேள்வி, பதில் பகு­தி­யில் விளக்­க­மாக எழு­து­வார். அந்த நாட்­க­ளில் பிர­ப­ல­மான ஆங்­கில நாவ­லா­சி­ரி­யர்­க­ளான  அகதா கிறிஸ்டி, ஜேம்ஸ்­ஹாட்லி சேஸ், ஹரால்ட் ராபின்ஸ், சிட்னி ஷெல்­டன், ஆர்­தர் ஹெய்லி, இர்­விங்  வாலஸ் போன்ற எழுத்­தா­ளர்­களை தமிழ் வாச­கர்­க­ளுக்கு அறி­மு­கம் செய்து வைத்த பெருமை எஸ்.ஏ. பியையே சாரும். அவர் கேள்வி, பதில்­க­ளில் தக­வல்­கள், கிண்­டல்­கள், ஆழ்ந்த கருத்­துக்­கள், நகைச்­சுவை எல்­லா­மு­மாக கலந்­தி­ருக்­கும். உதா­ர­ணத்­திற்கு ஒரு கேள்வி-– பதில்-– டி.கே. முரு­கன் சேலம்  ‘விளம்­ப­ரங்­கள்­தான் நறு­ம­ண­மாக இருக்­கி­றதே தவிர எந்த ஊது­வத்­தி­யும் எனக்கு மணப்­ப­தில்­லையே? பதில்: நான்­கில்  ஒன்று கார­ண­மாக இருக்­கக்­கூ­டும்.

1. நீங்­கள் வாங்­கி­யது போலிச் சரக்கு போலும். ஊது­வத்­தியை மாற்­றுங்­கள்.

2. நீங்­கள் ஊது­வத்­திக்கு வெகு அரு­கா­மை­யில் இருப்­பீர்­கள் போலும். அதை அனு­ப­விக்க இடை­வெளி தேவை. அறையை மாற்­றுங்­கள்.

3. ஊது­வத்­தி­யின் வாச­னையை அமுக்­கக் கூடிய வேறு மணங்­கள் சுற்று வட்­டா­ரத்­தி­லி­ருந்து வீசும் போலும்.  வீட்டை மாற்­றுங்­கள்.

4.    உங்­க­ளுக்கு சளி பிடித்­தி­ருக்­கும் போலும். மூக்கை மாற்­றுங்­கள்.

பக­வத் கீதை­யில் ஆழ்ந்த பற்­றுள்­ள­வர் எஸ்.ஏ. பி. வாரத்­தில் மூன்று நாட்­கள், கீழ்­பாக்­கத்­தி­லி­ருந்து தன் காரில் இணை­யா­சி­ரி­யர் ரா.கி. ரங்­க­ரா­ஜன், ஜா. ரா. சுந்­த­ரே­சன் இரு­வ­ரை­யும் அழைத்­துக் கொண்டு குமு­தம் பதிப்­பா­ளர் பி.வி. பார்த்­த­சா­ரதி வீட்­டுக்கு வரு­வார். அங்கே மாலை 6 மணி­யி­லி­ருந்து 8 மணி­வரை கீதை வகுப்பு நடக்­கும். முதல் நாள் சொல்­லப்­பட்ட கீதை ஸ்லோகத்­திற்கு அடுத்த நாள் விளக்­கம் சொல்­லப்­ப­டும். அவ­ரு­டைய உந்­து­த­லி­னால் இணை­யா­சி­ரி­யர் ரா.கி.ரங்­க­ரா­ஜன் 1,500 சிறு­க­தை­க­ளும், 800 நாவல்­க­ளும் எழு­தி­யி­ருக்­கி­றார். ரா.கி.ரவை ஒரு எழுத்து இயந்­தி­ரம் என்றே சொல்­ல­லாம். மர்­மம், ஆவி­கள், சரித்­தி­ரம், குடும்­பம் என்று பல­வ­கை­யான தொடர்­க­தை­கள் எழு­தி­யி­ருக்­கி­றார். ஒவ்­வொன்­றுக்­கும் ஒரு புனைப் பெயர் வைத்­துக் கொள்­வார் ரா.கி.ர. உதா­ர­ண­மாக சரித்­திர கதைக்கு ‘மோகினி’. ஆவி­கள் கதைக்கு ‘கிருஷ்­ண­கு­மார்’. குடும்­பக் கதைக்கு ‘ரா.கி.ரங்­க­ரா­ஜன்’ ஒரு காலத்­தில் ரா.கி.ரங்­க­ரா­ஜன் ஒரு வரு­டத்­திற்கு மேல் தொடர்ந்து குமு­தத்­தில் எழு­திய ‘படகு வீடு’ என்­பது மிக­வும் பிர­ப­லம். அவ­ரு­டைய ‘இது சத்­தி­யம்’, ‘சுமை­தாங்கி’ இரண்டு  நாவல்­க­ளுமே திரைப்­ப­டங்­க­ளாக வந்­தன.  ஜா.ரா சுந்­த­ரே­சன் இன்­னொரு பிர­ப­ல­மான பெயர் பாக்­கிய ராம­சாமி. அவர் உரு­வாக்­கிய கதா­பாத்­தி­ரங்­கள்­தான் சீதா பாட்டி, அப்­பு­சாமி. வாச­கர்­களை வாரா வாரம் குலுங்க குலுங்க சிரிக்க வைத்த கதா­பாத்­தி­ரங்­கள் இவை.

 நான்கு பேரும் ஆளுக்­கொரு வாரம் குமு­தம் இதழை தயா­ரிப்­பார்­கள். ஒரு வாரம் ரா.கி.ரங்­க­ரா­ஜன், அடுத்த வாரம் சுந்­த­ரே­சன், அதற்­க­டுத்த வாரம் புனி­தன், பிறகு எஸ்.ஏ. பி. ஆசி­ரி­யர் இலா­கா­வில் இருந்த நான்கு பேரும் மாதத்­திற்கு இரண்டு கதை­க­ளா­வது எழு­தித்­தான் ஆக­வேண்­டும்.  பத்­தி­ரி­கை­க­ளும், பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளும் மறக்­கக் கூ­டாத ஒரு மனி­தர் அம­ரர் எஸ்.ஏ.பி.                ***