பதட்டம் தந்த பரிசு!

பதிவு செய்த நாள் : 29 நவம்பர் 2019

விழுப்புரம் மாவட்டம், தாவடிப்பட்டு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2005ல், 3ம் வகுப்பு படித்த போது, விளையாட்டு போட்டி நடந்தது.

பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது, மேடை அருகே அமர்ந்திருந்தோம்; பரிசு பெறும் மாணவர்களை, பெயர் சொல்லி அழைத்தனர்.

இரண்டாவதாக வந்த என் நண்பன் தைரியமாக மேடையில் ஏறி, பரிசை வாங்கினான். அடுத்து என்னை அழைத்த போது, பதட்டத்தில் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தது. மீண்டும், 'முதல் பரிசு அமுதன்... வாப்பா...' என்றனர்.

கூச்சம் மிகுதியால் பதுங்கிக் கொண்டேன். விழா முடிந்து வகுப்புக்கு வந்ததும், 'ஏம்பா... பரிசு வாங்க வரல...' என்றார் ஆசிரியை கிரிஜா. தயக்கத்துடன், 'மேடைக்கு வர பயமாக இருந்துச்சு...' என்றேன்.

மிகுந்த பரிவுடன், 'வருங்காலத்தில், சாதனைகளுக்காக பல மேடைகளில் ஏறப்போகிறாய்... அதற்கான பயிற்சி தான் இது... தவறு செய்யாத வரை, யாருக்காகவும், எதற்காகவும் பயப்படாதே...' என்று அறிவுரைத்து, பென்சிலை அன்பளித்தார். அந்த ஆசிரியை தட்டிக் கொடுத்திருக்காவிட்டால், பயந்தாங்கொள்ளியாகவே இருந்திருப்பேன்.

எனக்கு, 21 வயதாகிறது; பரிசுகள் வாங்க மேடைகளில் ஏறும் போதெல்லாம், அந்த ஆசிரியையை நினைத்துக் கொள்கிறேன்; என்னை உயர்த்தியவரை, தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

- ச.அமுதன், விழுப்புரம்