பயம் காட்டிய குச்சி!

பதிவு செய்த நாள் : 29 நவம்பர் 2019

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 2005ல், 2ம் வகுப்பு சேர்ந்தபோது, ஆசிரியர்கள் வைத்திருந்த குச்சியை கண்டதும் பயம் ஏற்பட்டது. பீதியுடன் வகுப்பறைக்குள் நுழைந்தேன்.

வகுப்பு ஆசிரியை இந்திரா, சக மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

குச்சி பற்றியே எண்ணம் ஓடியதால், பதட்டத்துடன் அமர்ந்திருந்தேன். சற்று நேரத்தில், 'தண்ணீர் குடித்து வருகிறேன்...' என்று, தப்பி ஓடி வீட்டுக்கு வந்தேன்.

என்னைக் கண்டதும் பதறிய அம்மா, 'என்ன ஆயிற்று...' என்றார். அடி, உதை தந்து மீண்டும் இழுத்து சென்று பள்ளியில் விட்டார்.

பாசம் பொங்க, 'ஏன் ஓடினாய்...' என்று விசாரித்த ஆசிரியையிடம், 'உங்களை பார்க்க பயமாக உள்ளது...' என்றேன். பரிவுடன் என்னை மடியில் அமர வைத்து, 'உன்னை என் மகன் போல் பார்த்துக் கொள்வேன்...' என்று தேற்றினார். பயம் தெளிந்து, இயல்பாக பள்ளி செல்ல துவங்கினேன்.

இப்போது என் வயது, 21; பள்ளி செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளை காணும் போதெல்லாம், அந்த ஆசிரியையின், பாசமும், பரிவும் நினைவுக்கு வருகிறது.

-- கா.சங்கரலிங்கம், சென்னை.