குறும்பால் வந்த வேதனை!

பதிவு செய்த நாள் : 29 நவம்பர் 2019

சிவகங்கை, அரசு மன்னர் மேல்நிலைப் பள்ளியில், 1988ல், 12ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...

எங்கள் கணக்கு பதிவியல் பாட ஆசிரியர் எஸ்.சின்கா என்ற சுப்பிரமணியன், பாடங்களை விளக்கி நன்கு பயிற்சி அளித்தார். ஆண்டு இறுதியில், அவருக்கு பிரிவு உபசாரம் நிகழ்த்த முடிவு செய்தோம். அதற்கு மறுத்தவரை வற்புறுத்தி, சம்மதிக்க வைத்தேன்.

அந்த நிகழ்வை, புகைப்படம் எடுக்க விரும்பி, நண்பரிடம் புகைப்பட கருவி வாங்கி வந்தேன். பிலிம் என்ற படச்சுருள் வாங்க பணமில்லை. எனவே, நிகழ்ச்சியின் போது, புகைப்படம் எடுப்பது போல் பாவனை செய்தோம். தேர்ந்த புகைப்பட கலைஞரை மிஞ்சும் வகையில் நடித்தோம். பலரும் மகிழ்ச்சியுடன் மிடுக்காக காட்சிக்கு நின்றனர்.

விழா இனிதே முடிந்தது. ஒருவாரத்துக்கு பின், புகைப்படங்களைக் கேட்டார் ஆசிரியர். தினமும் ஒரு காரணம் சொல்லி தட்டிக்கழித்து வந்தோம். மிகுந்த கோபமடைந்த ஆசிரியர், மிரட்டி கேட்டார்.

உண்மையை எடுத்து கூறியதும், 'அடுத்தவர் உணர்வுடன் விளையாடாதீர்கள்; அது வாழ்நாள் முழுவதும் கசப்பை தரும்...' என, அறிவுரை வழங்கினார்.

என் வயது, 49; வாலிப வயதில், விளையாட்டாக செய்தது, தாங்க முடியாத வேதனையை தருகிறது. அந்த ஆசிரியரிடம் மானசீகமாக மன்னிப்பு கோருகிறேன்.

- கு.ரமேஷ்பாபு, சிவகங்கை.