ததாஸ்து!

பதிவு செய்த நாள் : 29 நவம்பர் 2019

ரத்தினபுரி நாட்டை, சித்ரசேனன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவரது மனைவி மந்தாகினி, மகன் இளமாறனுக்கு வெள்ளிக் கிண்ணத்தில், பால் சோறு ஊட்டியபடி இருந்தாள்.

குழந்தை உண்ணாமல், அடம் பிடித்து, போக்குக் காட்டியபடி ஓடியது.

மந்தாகினி, 'நீ சோறு உண்ணா விட்டால், பிரம்ம ராட்சஷனிடம் பிடித்து கொடுத்து விடுவேன்...' என்றாள்.

அப்போது, வானில் துர்தேவதைகள் உலாவிக் கொண்டிருந்தன. அவை, 'ததாஸ்து...' என்றன.

அதற்கு, 'அப்படியே ஆகுக...' என்று பொருள். அடுத்தகணம், பிரம்ம ராட்சஷன் குழந்தையை கவர்ந்து சென்றான்.

இதை, சற்றும் எதிர்பாராத மகாராணி திடுக்கிட்டு அலறினாள். அனைவரும் ஓடி வந்தனர். குழந்தையுடன், வானில் பறந்துச் செல்லும் ராட்சஷனை பற்றி, மன்னரிடம் தெரிவித்தனர்.

மன்னர் கவலையில் மூழ்கினார்.

இளவரசனை மீட்டு வருபவருக்கு, ஐந்து ஊர்களை ஆளும் மந்திரி பதவி தருவதாக, முரசு கொட்ட செய்தார். ஒரு இளைஞன் துணிந்து வந்தான். மீட்டு வருவதாக உறுதி அளித்தான். ஒரு வாளை மட்டும் பெற்று புறப்பட்டான்.

காட்டு வழியில், ஒரு அதிசயக் காட்சியைக் கண்டான்.

விறகுகளில் நெருப்பு மூட்டி, கால்களை எரித்துக் கொண்டிருந்தாள் ஒரு மூதாட்டி. அதை வினோதமாக பார்த்த இளைஞனிடம், 'என்ன பார்க்கிறாய்... குளிர் தாங்கவில்லை; அது தான், கால்களை நெருப்பில் போட்டு கொண்டிருக்கிறேன்...' என்றாள்.

இளைஞனுக்கு பயம் வர, வாளை ஓங்கினான். மூதாட்டி, அரக்கியாக மாறி, 'நான் ஒரு பெண், என்னை கொன்றால் பாவம் சேரும்...' என்றாள்.

எதையும் யோசிக்காமல் வாளை வீசி, அவளைக் கொன்றான்.

மறு கணமே, அவன் முன் ஒரு அழகிய கந்தர்வ பெண் தோன்றி, 'இளைஞனே... உன் செயலுக்கு நன்றி. ஒரு முனிவரின் தவத்தை கெடுத்ததால், சாபம் பெற்றேன்; இன்று, உன்னால் அது நீங்கியது. உன்னை, அந்த பிரம்ம ராட்சஷன் குகைக்கு அழைத்துச் செல்கிறேன்...

'இதோ... இந்த மந்திர நீரை, அவன் மீது தெளித்தால், மயங்கி விழுவான்; அப்போது, ஒரு கழுகு பறந்து வரும். அதில் தான் அவன் உயிர் இருக்கிறது. கணமும் தாமதிக்காகமல் அதை, வாளால் வெட்டி விடு...' என்று அறிவுரைத்து, குகையில் விட்டாள்.

அவள் கூறியபடி, அரக்கனை கொன்று, இளவரசனை மீட்டு வந்தான்.

மன்னரும், மகாராணியும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஐந்து ஊர்களை ஆளும் மந்திரி பதவியை பெற்றான் இளைஞன்.

குழந்தைகளே... எப்போதும், நலம் தரும் சொற்களையே பேசுங்கள். வீணான சொற்களை பேசி, வாழும் நேரத்தை வீணடிக்காதீர்கள்!

எல். மகாதேவன்