விஞ்ஞானி ஐன்ஸ்டீன் விரும்பிய தமிழர்!

பதிவு செய்த நாள் : 29 நவம்பர் 2019

முன்னுாறு ஆண்டுகளாக, விடை காண முடியாத, 'வாரிங்ஸ் பிராப்ளம்' என்ற, கணித புதிரை விடுவித்தவர் எஸ்.எஸ்.பிள்ளை என்ற சிவசங்கர நாராயணபிள்ளை.

400 ஆண்டுகளாக விடை காண முடியாத, 'போரியர் சீஸ்' என்ற, கடின கணிதப் புதிரையும் விடுவித்து வாகை சூடினார்.

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தை அடுத்த, வல்லம் கிராமத்தில், ஏப்., 5, 1901ல் பிறந்தார். பிறந்த சில மாதங்களிலே தாயை இழந்தார். செங்கோட்டை, எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளியில் படித்த போதே தந்தையை இழந்தார்; உறவினர்கள் உதவியால் தொடர்ந்து படித்தார்.

திருவனந்தபுரம், மகாராஜா கல்லுாரியில், இளங்கலை பயின்ற போது, கணித பாடத்தில், எண்ணியல் பிரிவு ஈர்த்தது. சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக சேர்ந்தார். அவரது திறனை வியந்த பேராசிரியர் குழு, எம்.எஸ்சி., பட்டம் வழங்கி கவுரவித்தது.

அவரது கணித செயல்முறை விளக்கம், புதுமையாக அமைந்திருந்தது. மிக எளிமையாக, எண் புதிர்களை விடுவித்தார். சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழத்தில், கணிதத்துறையில் விரிவுரையாளராக, 1929ல் சேர்ந்தார். எண்ணியல் கோட்பாடு தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகள், கணித ஆய்வு இதழ்களில் வெளியாகி புகழ் பெற்றன.

சென்னை பல்கலைக்கழகத்தில், கணிதத்தை ஆய்வு செய்து, டி.எஸ்சி., என்ற முனைவர் பட்டத்தை, முதன்முதலாக பெற்றார். மாணவர்களுக்கு கணித பாடம் தொடர்பான கசப்பை நீக்கி, இனிமையாக போதித்தார்.

ஐரோப்பிய கணிதவியல் அறிஞர் பார்மேட், 1640ல், புதிர் ஒன்றை போட்டிருந்தார். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலை பேராசிரியர் வாரிங்ஸ், அந்த புதிருக்கு விடை கண்டார். அந்த விடையை கண்ட வழிமுறையை விளக்கும் முன் இறந்தார். அவர் பெயரிலேயே அப்புதிர், 'வாரிங்ஸ் பிராப்ளம்' என, வழங்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடான ஹங்கேரி கணித அறிஞர் பால் எர்டாஸ், அந்த புதிரை விடுவித்த வழிமுறையை விளக்க முயன்றார்; முடியவில்லை. ஐரோப்பா, அமெரிக்கா, ரஷ்யா என, உலக கணிதவியல் அறிஞர்களும் விளக்க முடியாமல் தவித்தனர்.

மிக எளிமையாக அந்த புதிரை விடுவித்த வழிமுறையை உலகிற்கு தெரிவித்தார்

எஸ்.எஸ்.பிள்ளை. அவரது அறிவுத்திறனை, உலகமே வியந்து பாராட்டியது.

கணிதவியல் கண்டுபிடிப்புகளை, 'டாக்டர் பிள்ளைஸ் தியரி ஆப் நெம்பர்ஸ்' என்ற பெயரில், கோட்பாட்டு நுாலாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். கணிதவியலில், அது வழிகாட்டியாக இன்றும் உள்ளது.

நானுாறு ஆண்டுகளாக விடை காண முடியாமல் தவித்த, 'போரியர் சீஸ்' என்ற கணித புதிருக்கும், எளிமையாக விடை கண்டார்.

அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த, உலக கணிதவியல் மாநாட்டுக்கு தலைமை தாங்க அழைப்பு வந்தது. பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன், ஆய்வில் தனக்கு உதவியாக இருக்கும்படி எஸ்.எஸ்.பிள்ளையை அழைத்தார்.

இந்த அழைப்புகளை ஏற்று, ஆக., 30, 1950ல் இங்கிலாந்து புறப்பட்டார். ஆப்ரிக்க நாடான எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே, அவர் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. மிகச்சிறந்த கணித மேதை, 49 வயதில் மறைந்தார். இவர் போன்ற அறிஞர்களின் உழைப்பால் தான், நம்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது.