சேமிப்பின் விதை!

பதிவு செய்த நாள் : 22 நவம்பர் 2019

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், இனாம் கரிசல்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 1988ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...

பள்ளி பாட நோட்டில், பேனாவால் தான் எழுத வேண்டும் என்று கண்டிப்பான விதியிருந்தது. வறுமையால் வாங்க முடியாமல் தவித்தேன். வேறு வழியின்றி, மற்றொரு மாணவனின், பேனாவை எடுத்த போது, மாட்டிக் கொண்டேன்.

என்னை இழுத்துச் சென்று, தலைமையாசிரியர் கோபால்சாமி முன் நிறுத்தி, 'என் பேனாவை களவாண்டுட்டான் ஐயா...' என்றான்.

என்னை முறைத்தபடியே, 'அவன் கூறுவது உண்மையா...' என்று, கேட்டார். பயத்துடன், தலையாட்டி ஒப்புக் கொண்டேன். அந்த மாணவனை அனுப்பிய பின், 'ஏன் அப்படி செய்தாய்...' என்றார். குடும்ப வறுமையைக் கூறினேன்.

மிக நிதானமாக, 'வறுமை என்றால், அடுத்தவர் பொருளை எடுக்கலாமா... சுயமாக சேமித்து தான் தேவையான பொருளை வாங்கணும்...' என்று அறிவுரைத்து, 'தின்பண்டம் வாங்க, பெற்றோர், எத்தனை காசு கொடுப்பர்...' என்றார். தினமும், 20 காசு தரும் விவரத்தை கூறினேன்.

உடனே, 'அப்படின்னா, 10 காசுக்கு மிட்டாய் வாங்கு... மீதியை, 20 நாட்கள் சேமித்தால், அழகிய பேனா வாங்கலாம். அதுவரை, என் பேனாவை பயன்படுத்து...' என்று தந்தார்.

அவரது அறிவுரைப்படி சேமித்து, புதிய பேனா வாங்கினேன். அவர் தந்ததை திருப்பிக் கொடுக்க சென்ற போது, நெகிழ்ந்து பாராட்டினார். அந்த பேனாவையும் பரிசாக தந்தார்.

இப்போது என் வயது, 42; திருடும் எண்ணத்தை அகற்றி, சேமிப்பு பழக்கத்தை துாண்டிய, அந்த தலைமையாசிரியரை போற்றி வாழ்கிறேன்.

- ஜோ.கோவிந்தக்கனி, விருதுநகர்.