நம்பிக்கை துரோகம்!

பதிவு செய்த நாள் : 22 நவம்பர் 2019

மஞ்சக்குப்பம் கிராம தோட்டத்தில், தென்னையும், மாமரங்களும் நின்றன. தென்னை மரத்தில், ஒரு கழுகு நெடுநாட்களாக வசித்து வந்தது.

மா மரத்தில், அழகிய பச்சைக் கிளிகள் இரண்டு வசித்தன; ஒரே தோட்டத்தில் இருந்தாலும், கழுகும், பச்சைக்கிளிகளும் பேசியதே இல்லை.

ஒரு நாள் -

முட்டை இட்டது பெண் கிளி; மகிழ்ச்சியடைந்தது ஆண் கிளி. அதே நேரம் கவலையுடன், 'காலையில் உணவு தேட சென்றால், மாலை தான் திரும்புவோம்; அதுவரை, முட்டைகளை யார் கவனித்துக் கொள்வது...' என்றது.

உடனே, 'பக்கத்து மரத்தில் வசிக்கும் கழுகிடம் உதவி கேட்கலாம்...' என்றது பெண் கிளி.

அவை, தென்னை மரத்திற்கு சென்றன; கம்பீரமாக அமர்ந்து இருந்த கழுகைக் கண்டதும், அஞ்சி நடுங்கின. மலர்ந்த முகத்துடன், 'வாருங்கள் கிளிகளே... நலம் தானா... எங்கிருந்து வருகிறீர்கள்...' என்று அன்புடன் விசாரித்தது கழுகு.

பயம் விலகிய கிளிகள், 'இங்கு தான், மாமரத்தில் வசிக்கிறோம்; எங்களுக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது...' என்றன.

உடனே, 'என்ன உதவி...' என்றது கழுகு.

வந்த விஷயத்தைக் கூறின பச்சைக்கிளிகள்.

மிகவும் உறுதியான குரலில், 'திரும்பி வரும் வரை, முட்டைகளை தினமும் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்... நீங்கள் கவலைப்பட வேண்டாம்...' என்றது கழுகு.

சில நாட்கள் சென்றன -

முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தன; அவற்றை, சாப்பிடும் ஆசை வரவே, கட்டுப்படுத்த முயன்றது கழுகு; ஆனால் முடியவில்லை.

ஒரு குஞ்சை கொத்தி, ருசி பார்த்தது கழுகு. ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் கழுத்தை நீட்டி அமர்ந்திருந்தது. அப்போது, அம்பு ஒன்று, அதன் கழுத்தில் பாய்ந்து; அது, 'ஐயோ...' என, கதறித் துடித்தபடி சாய்ந்தது.

கிளிகள், அந்த நேரத்தில் அங்கு வந்தன. அம்பு பட்டு விழுந்து கிடந்த கழுகைக் கண்டு பதறியபடி, 'அண்ணா... யார் இப்படி செய்தது...' என்று, முதலுதவி செய்ய முயன்றன.

உடனே கழுகு, 'மன்னித்து விடுங்கள் கிளிகளே... நான் நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன். நம்பி ஒப்படைத்த உங்கள் குஞ்சுகளில் ஒன்றை தின்று விட்டேன். அதற்கு தான் தக்க தண்டனை கிடைத்துள்ளது...' என்று கூறி, உயிரை விட்டது.

குட்டி பூக்களே... நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது; துரோகம் செய்தால், தக்க தண்டனை கிடைக்கும் என்பதை, மனதில் கொண்டு வாழுங்கள்.