உண்மையான நட்பு!

பதிவு செய்த நாள் : 22 நவம்பர் 2019

முத்தளம் கிராமத்தில், மாணிக்கமும், விஷ்வாவும் நண்பர்கள். தினமும், காலை நேரத்தில், கட்டு மரத்தில், மீன் பிடிக்கச் செல்வர்.

அன்று வழக்கம் போல், மீன் பிடிக்கச் சென்றனர். வெகுநேரம் ஆகியும் வலையில், போதுமான மீன்கள் சிக்கவில்லை; கரையை அடைந்ததும், கிடைத்திருந்த மீன்களை பங்கிட்டனர்.

'நண்பனே... இந்த மீன்களை விற்றால், கிடைக்கும் பணத்தில், இருவருக்கும் போதிய உணவு பொருட்களை வாங்குவது கடினம். அதனால், மீன் விற்று கிடைக்கும் பணத்தை, ஒருவரே எடுத்து கொள்ளலாம்...' என்றான் விஷ்வா.

'அப்படியானால், நீயே எடுத்துக் கொள்; நீ தான் மனைவி, மக்களோடு இருக்கிறாய்; உன் குடும்பத்தை வறுமையில் வாட விடாதே...' என்றான் மாணிக்கம்.

'இல்லை நண்பனே... உன் குடும்பத்தில், இரண்டு நபர்கள் அதிகமாக உள்ளனர்; அதனால், நீ தான் எடுத்துக் கொள்ள வேண்டும்...' என்றான் விஷ்வா.

அதை அழுத்தமாக மறுத்தான் மாணிக்கம். இருவரும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், சலங்கை சத்தம் கேட்டது; திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர்.

கடற்கரையில், அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். இருவரும் திகைப்புடன் வாயடைத்தனர். அந்த பெண், தேவதை போல் காட்சி தந்தாள். அவள் முகத்தை, இருவரும் உற்றுப் பார்த்தனர்.

இதைக் கண்ட தேவதை, 'நண்பர்களே... என்ன அப்படிப் பார்க்கிறீர்கள். நான் தான், கடல் தேவதை; நீங்கள் ஏதோ வாக்கு வாதம் செய்வது போல தெரிகிறது. அதை அறிந்துக் கொள்ளவே வந்தேன்...' என்றது.

'தேவதையே... உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி; நாங்கள், இணை பிரியாத நண்பர்கள். பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம்; இன்று குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளதால், யார் எடுத்துக் கொள்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது... என் குடும்பத்தைப் பற்றி, கவலையில்லை; நண்பன் குடும்பம் வறுமையில் வாட கூடாது என்பதற்காக, எல்லா மீன்களையும், அவனையே எடுத்துக் கொள்ள சொல்கிறேன்...

'நண்பனோ அதை மறுத்து, என்னை எடுத்துக் கொள்ள வலியுறுத்துகிறான்; நீயே, அவனுக்கு புத்திமதி கூறி புரியவை...' என்றான் விஷ்வா.

சிரித்தபடியே, அவர்களை நோக்கிய கடல் தேவதை, 'ஒற்றுமையுடன், இருவரது குடும்ப நலன்கள் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அன்பும், நல்லெண்ணமும் பாராட்டத்தக்கது; என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இருவருக்கும் உதவி செய்ய காத்திருக்கிறேன்...' என்றது.

அவர்கள், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

கடல் தேவதை, 'என்ன அப்படி பார்க்கிறீர்கள்; இருவருக்கும், இரண்டு மூட்டை செல்வம் தருகிறேன்; அதை வைத்து, தேவையான பொருட்களை வாங்கி, குடும்பத்துடன் வறுமையின்றி வாழலாம்...' என்றது.

இரண்டு பேர் முன்பும், மூட்டைகள் தோன்றின; அங்கிருந்து மறைந்தது கடல் தேவதை. மூட்டைகள் நிறைய பொற்காசுகள் இருந்தன. அவற்றைக் கொண்டு, ஏழை, எளியவர்களுக்கு உதவி, இன்பமாக வாழ்ந்தனர். அவர்களுக்குள் போட்டி, பொறாமை வரவேயில்லை.

செல்லங்களே... உண்மையான நட்புடன் இருந்ததால், எத்தனை பெரிய அதிர்ஷ்டம் தேடி வந்தது பார்த்தீர்களா... நேர்மையாக வாழ்பவருக்கு, எல்லா நன்மைகளும் கிடைக்கும்.