புதிய அரசியல் வாரிசு

பதிவு செய்த நாள் : 16 நவம்பர் 2019

லோக் ஜன­சக்தி கட்­சி­யின் தலை­வ­ராக சிராக் பஸ்­வான் (37) தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார். பீகாரை மைய­மாக கொண்டு இயங்­கும் லோக் ஜன­சக்தி கட்­சி­யின் நிறு­வ­னர் ராம்­வி­லாஸ் பஸ்­வான் மகன்­தான் சிராக் பஸ்­வான். பீகா­ரில் ராஷ்­டி­ரிய ஜனதா தளம் கட்­சி­யின் நிறு­வ­னர் லாலு பிர­சாத் யாதவ் மனைவி, மகன் உட்­பட அவ­ரது குடும்­பத்­தி­னர் அர­சி­ய­லில் ஈடு­பட்­டுள்­ள­னர். இதே போல் லோக் ஜன­சக்தி கட்­சி­யி­லும், அதன் தலை­வர் ராம்­வி­லாஸ் பஸ்­வா­னின் தம்பி, மகன் ஆகி­யோ­ரும் அர­சி­ய­லில் ஈடு­பட்­டுள்­ள­னர். தற்­போது வயது மூப்­பின் கார­ண­மாக 73 வய­தான ராம்­வி­லாஸ் பஸ்­வான், அவ­ரது மகன் சிராஜ் பஸ்­வா­னுக்கு கட்சி தலை­வர் பத­வியை வழங்­கி­யுள்­ளார். சமீ­பத்­தில் டில்­லி­யில் உள்ள ராம்­வி­லாஸ் பஸ்­வான் வீட்­டில் நடை­பெற்ற தேசிய செயற்­குழு கூட்­டத்­தில் சிராக் பஸ்­வான் கட்­சி­யின் தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார். பீகா­ரில் உள்ள ஜாமுயி தொகு­யில் இருந்து தொடர்ந்து இரண்­டா­வது முறை லோக்­சபா உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர் சிராக் பஸ்­வான்.  

ராம்­வி­லாஸ் பஸ்­வான் மிக இளம் வய­தில் அர­சி­யல் பய­ணத்தை தொடங்­கி­ய­வர். தற்­போது எட்­டா­வது முறை­யாக லோக்­சபா உறுப்­பி­ன­ராக உள்­ளார்.  2009ல் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் மட்­டும் தோல்வி அடைந்­தார். அப்­போது ராஜ்­ய­சபா உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.  சம்­யுக்தா சோஷ­லிஸ்ட் கட்­சி­யில் இருந்து அர­சி­யல் பய­ணத்தை தொடங்­கிய ராம்­வி­லாஸ் பஸ்­வான், லோக் தளம், ஜனதா கட்சி, ஐக்­கிய ஜனதா தளம் போன்ற கட்­சி­க­ளில் முக்­கிய பொறுப்­பு­களை வகித்­த­வர். ஹாஜி­பூர் தொகு­தி­யில் இருந்து 1977ம் ஆண்டு முதல் தொடர்ந்து லோக்­சபா உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்.

ஐக்­கிய ஜனதா தளத்­தில் இருந்து 2000ம் ஆண்­டில் ராம்­வி­லாஸ் பஸ்­வான் தனி­யாக பிரிந்து லோக் ஜன­சக்தி கட்­சியை தொடங்­கி­னார். அப்­போது நிதிஷ் குமார், ஜார்ஜ் பெர்­னான்­டாஸ் ஆகி­யோ­ரு­டன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடே தனிக் கட்சி தொடங்க கார­ணம். 2004ல் காங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யில் இணைந்து, காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான ஐக்­கிய முற்­போக்கு கூட்­டணி அர­சில் மத்­திய இர­சா­ய­ணம், உரத்­துறை அமைச்­ச­ராக இருந்­தார். அதற்கு முன் வி.பி. சிங் அர­சில் மத்­திய தொழி­லா­ளர்­ந­லத்­துறை அமைச்­ச­ரா­க­வும் இருந்­துள்­ளார். மத்­திய ரயில்வே அமைச்­சர், மத்­திய தக­வல் தொடர்பு துறை,மத்­திய நிலக்­கரி துறை அமைச்­ச­ரா­க­வும் இருந்­துள்­ளார்.

காங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யில் இருந்த லோக் ஜன­சக்தி கட்சி 2014 முதல் பா.ஜ.,தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணிக்கு இடம் பெயர்ந்­தது. நரேந்­திர மோடி தலை­மை­யி­லான அர­சில் இரண்­டா­வது முறை­யாக மத்­திய அமைச்­ச­ராக இருப்­ப­வர் ராம்­வி­லாஸ் பஸ்­வான். தற்­போது மத்­திய உணவு, நுகர்­வோர் நலன், பொது­வி­நி­யோக துறை அமைச்­ச­ராக உள்­ளார். 1996 முதல் ஐந்து பிர­த­மர்­க­ளின் கீழ் மத்­திய அமைச்­ச­ராக தொடர்ந்து ராம்­வி­லாஸ் பஸ்­வான் செயல்­பட்­டுள்­ளார்.  

தற்­போது லோக் ஜன­சக்தி கட்சி தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள சிராக் பஸ்­வான், பொறி­யி­யல் பட்­ட­தாரி. பாலி­வுட் திரை­யு­ல­கில் முயற்சி செய்து வெற்றி அடை­யா­மல் போன­வர். இவர் நடித்த ‘மிலி நா மிலி ஹம்’ திரைப்­ப­டம் எதிர்­பார்த்த அளவு வெற்றி பெற­வில்லை. பீகா­ரில் வேலை­யில்­லாத இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்பை உரு­வாக்க சிராஜ் பஸ்­வான் ‘சிராக் கா ரோஜர்’ என்ற தொண்டு நிறு­வ­னத்­தை­யும் நடத்தி வரு­கி­றார்.

சிராக் பஸ்­வான் கட்சி தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட உட­னேயே, ராம்­வி­லாஸ் பஸ்­வான் வீட்­டைச் சுற்­றி­லும் வாழ்த்து போஸ்­டர்­கள் ஒட்­டப்­பட்­டன. அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் பெரு­ம­ள­வில் திரண்டு மகிழ்ச்­சியை கொண்­டா­டி­னர். சிராக் பஸ்­வா­னி­டம் வாரிசு அர­சி­யல் பற்றி கேட்­ட­போது, “நான் தான் வாரிசு அர­சி­யல் குறித்து கருத்து தெரி­வித்த கடைசி நப­ராக இருப்­பேன். நான் வாரிசு அர­சி­ய­லால் வந்­தி­ருக்­க­லாம். ஆனால் மக்­கள் உங்­கள் அர­சி­யல் பின்­பு­லத்தை கருத்­தில் கொள்­ளாது, உங்­கள் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிப்­பார்­கள். நீங்­கள் கொடுத்த வாக்­கு­று­தியை எந்த அளவு காப்­பாற்­று­கின்­றீர்­கள் என்­பதை பொருத்தே மக்­கள் ஆத­ரவு உள்­ளது. எனக்கு திற­மை­யும், ஆற்­ற­லும் இல்­லா­விட்­டால், நான் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வேன்.

எனது தகப்­ப­னார் சில கால­மாக இளம் தலை­முறை பொறுப்­பு­களை எடுத்­துக் கொள்ள வேண்­டும். நமது நாட்­டில் பெரு­வா­ரி­யாக இளம் தலை­மு­றை­யி­னர் உள்­ள­னர். எனவே இதுவே இளை­ஞர்­கள் கட்சி பொறுப்பை ஏற்­றுக் கொள்ள சரி­யான நேரம் என்று கூறி­வ­ரு­கி­றார். தேசிய செயற்­குழு உறுப்­பி­னர்­க­ளும் இதே கருத்தை வலி­யு­றுத்­தி­னார்­கள். நான் ஒரு மன­தாக கட்சி தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டேன்” என்று தெரி­வித்­தார்.

கட்சி தலை­வர் பொறுப்பை மக­னுக்கு அளித்த ராம்­வி­லாஸ் பஸ்­வான் கூறு­கை­யில், மத்­திய அமைச்­சர், கட்சி தலை­வர் என்ற இரண்டு பொறுப்­பு­க­ளை­யும் நிர்­வ­கிக்க விரும்­ப­வில்லை. கட்சி வேலை­களை கவ­னிக்க நேரம் ஒதுக்க முடி­ய­வில்லை. எனது நிழ­லில் சிராக் இருப்­பதை விரும்­ப­வில்லை. இனி கட்சி என்ன செய்­தா­லும், அது நல்­ல­தாக இருந்­தா­லும், கெட்­ட­தாக இருந்­தா­லும் அவ­ரது (சிராக்) பொறுப்பே” என்று கூறி­னார்.

சிராக் பஸ்­வான் கட்சி தலை­வர் பொறுப்பை ஏற்­றுக் கொண்ட பிறகு முதன் முத­லில் எதிர் கொள்­ளப்­போ­வது ஜார்­கண்ட் மாநில சட்­ட­சபை தேர்­த­லையே. பீகா­ரில் இருந்து பிரிக்­கப்­பட்ட மாநி­லம் தான் ஜார்­கண்ட். சென்ற 2014ல் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் பா.ஜ.,தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணி­யில் இடம் பெற்று இருந்­தது. அப்­போது லோக்­ஜ­ன­சக்தி கட்­சிக்கு சிக்­கா­ரி­புரா தொகுதி ஒதுக்­கப்­பட்­டது. சிக்­கா­ரி­புரா தொகு­தி­யில் லோக்­ஜ­ன­சக்தி கட்­சியே இல்லை. தேர்­த­லில் போட்­டி­யிட வேட்­பா­ள­ரும் இல்லை. இறு­தி­யில் பா.ஜ.,வைச் சேர்ந்­த­வரே லோக் ஜன­சக்தி கட்சி சின்­னத்­தில் போட்­டி­யிட்டு, ஜார்­கண்ட் முக்தி மோர்ச்சா வேட்­பா­ள­ரி­டம் தோல்­வியை தழு­வி­னார்.

இந்த சட்­ட­சபை தேர்­த­லில் லோக் ஜன­சக்தி கட்சி ஆறு தொகு­தி­க­ளில் போட்­டி­யிட திட்­ட­மிட்­டது. இது தொடர்­பாக பா.ஜ., தேசிய தலை­வர் அமித்ஷா, செயல் தலை­வர் ஜே.பி.நட்டா, ஜார்­கண்ட் முத­ல­மைச்­சர் ரகு­பார் தாஸ் ஆகி­யோ­ருக்கு கடி­தம் எழு­தி­யுள்­ள­தாக சிராக் பஸ்­வான் தெரி­வித்­தி­ருந்­தார். அத்­து­டன் சென்ற தேர்­த­லில் பா.ஜ., குறைந்த ஓட்­டு­கள் வாங்­கிய ஆறு தொகு­தி­களை குறிப்­பிட்டு கேட்­டுள்­ளோம். நாங்­கள் இரண்டு, மூன்று தொகு­தி­களை குறைத்­துக் கொள்­ள­வும் தயா­ராக உள்­ளோம் என்­றும் அவர் கூறி­யி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் பார­திய ஜனதா சென்ற 10ம் தேதி முதல் வேட்­பா­ளர் பட்­டி­யலை அறி­வித்­துள்­ளது. இதில் 52 தொகு­தி­க­ளுக்­கான வேட்­பா­ளர்­கள் இடம் பெற்­றுள்­ள­னர். (சட்­ட­ச­பை­யில் மொத்த உறுப்­பி­னர் எண்­ணிக்கை 81.) இந்த 52 தொகு­தி­க­ளில் லோக்­ஜ­ன­சக்தி கட்சி கேட்­டி­ருந்த ஜார்­முன்டி, பங்கி, லட்­டி­கர் ஆகிய மூன்று தொகு­தி­க­ளும் இடம் பெற்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

பா.ஜ.,முதல் வேட்­பா­ளர் பட்­டி­யலை அறி­வித்த பிறகு சிராக் பஸ்­வான் கருத்து தெரி­விக்­கை­யில், அவர்­கள் (பா.ஜ.,) 2014ல் செய்­ததை போன்று இப்­போ­தும் செய்ய இருப்­ப­தாக தக­வல்­கள் கிடைத்­துள்­ளன. எங்­கள் கட்­சியோ அல்­லது வேட்­பா­ளரோ இல்­லாத சில தொகு­தி­களை எங்­க­ளுக்கு ஒதுக்க இருப்­ப­தாக அறி­கின்­றேன். இந்த முறை இது போன்ற அணு­கு­மு­றையை ஏற்­றுக் கொள்ள மாட்­டோம். ஜார்­கண்ட் மாநில கட்­சி­யி­னர் தனித்து போட்­டி­யி­டவே விரும்­பு­கின்­ற­னர் என்று சிராக் பஸ்­வான் தெரி­வித்­தார்.

பா.ஜ., முதல் வேட்­பா­ளர் பட்­டி­யலை அறி­விப்­ப­தற்கு முன்­பாக சிராக் பஸ்­வான், ஜார்­கண்ட் மாநில பா.ஜ., பொறுப்­பா­ளர் ஓம் மாத்­துரை சந்­தித்து பேசி­னார். அப்­போது பா.ஜ.,சார்­பில் எந்த உறுதி மொழி­யும் கொடுக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­கி­றது.

“இது போன்று அடிக்­கடி நடக்­கின்­றது. அவர்­கள் கூட்­ட­ணி­யில் உள்ள கட்­சி­க­ளி­டம் தெளி­வாக கூற­வேண்­டும். இதை நான் அடிக்­கடி பா.ஜ.,வின­ரி­டம் கூறி­யுள்­ளேன். நீங்­கள் உங்­கள் முடிவை தாம­தப்­ப­டுத்­தி­னால், அது தேர்­தல் முடி­வு­க­ளை­யும் பாதிக்­கும். பா.ஜ,வினர் இதே மாதிரி மற்­றொரு கூட்­டணி கட்­சி­யான அகில ஜார்­கண்ட் மாண­வர் சங்க கட்­சிக்­கும் செய்­துள்­ள­னர் என்று சிராக் பஸ்­வான் குற்­றம் சாட்­டி­னார். அத்­து­டன் மகா­ராஷ்­டி­ரா­வில் பா.ஜ.,கூட்­ட­ணி­யில் இருந்து சிவ­சேனா வெளி­யே­றி­யுள்­ளதை பாராட்­டி­யுள்ள சிராக் பஸ்­வான், “ சிவ­சேனா ஆரம்­பத்­தில் இருந்தே கூறி­ய­படி உறு­தி­யாக இருந்­தது. அதன் எதிர்­கா­லத்­திற்கு பா.ஜ.,கூட்­ட­ணி­யில் இருந்து வெளி­யே­றி­யதே சரி­யான முடிவு. அத்­து­டன் ஜார்­கண்­டில் தனித்து போட்­டி­யிட போவ­தா­க­வும், 50 தொகு­தி­க­ளில் வேட்­பா­ளர்­களை நிறுத்­தப்­போ­வ­தா­க­வும் சிராக் பஸ்­வான் அறி­வித்­துள்­ளார். இதே போல் பா.ஜ,கூட்­ட­ணி­யில் உள்ள ஐக்­கிய ஜனதா தளம், அகில ஜார்­கண்ட் மாண­வர் சங்க கட்­சி­யும் தனித்து போட்­டி­யி­டு­கின்­றன.

சிராக் பஸ்­வான் கட்சி தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிறகு, எதிர் கொள்­ளும் முதல் தேர்­த­லாக ஜார்­கண்ட் மாநில சட்­ட­சபை தேர்­தல் இருக்­கும். இந்த மாநில சட்­ட­சபை தேர்­தல் வரும் 30ம் தேதி தொடங்கி டிசம்­பர் 20ம் தேதி வரை ஐந்து கட்­ட­மாக நடை­பெ­று­கின்­றது. ஜார்­கண்ட் மாநி­லத்­தில் தற்­போது பா.ஜ. ஆட்சி நடை­பெ­று­கி­றது. முதல்­வ­ராக ரகு­பர் தாஸ் உள்­ளார்.  இவரே ஐந்து வரு­டம் தொடர்ந்து முதல்­வர் பத­வி­யில் இருந்­த­வர். இதற்கு முன் அமைந்த அர­சு­கள், முதல்­வர் ஐந்து வரு­டம் நீடித்­தது இல்லை. மகா­ராஷ்­டிரா, ஹரி­யா­னா­வில் ஆட்­சி­யில் இருந்த பா.ஜ., சமீ­பத்­தில் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் மற்ற கட்­சி­க­ளின் தய­வில் ஆட்சி அமைக்­கும் நிலை ஏற்­பட்­டது. ஹரி­யா­னா­வில் ஜன்­நா­யக் ஜனதா கட்­சி­யு­டன் கூட்­டணி சேர்ந்து ஆட்சி அமைத்­துள்­ளது. மகா­ராஷ்­டி­ரா­வில் கூட்­டணி கட்­சி­யான சிவ­சேனா உடன் ஏற்­பட்ட பிணக்கு கார­ண­மாக ஆட்சி அமைக்க முடி­ய­வில்லை.

இந்­நி­லை­யில் ஜார்­கண்ட் சட்­ட­சபை தேர்­தல் முடி­வு­கள் எப்­படி இருக்­கும் என்று உன்­னிப்­பாக கவ­னிக்­கப்­ப­டு­கி­றது. 2014ல் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் பா.ஜ.,37 இடங்­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றது. மற்ற கட்­சி­க­ளைச் சேர்ந்த சட்­ட­சபை உறுப்­பி­னர்­கள் பா.ஜ.,பக்­கம் தாவி­ய­தால் ஆட்சி அமைத்­தது. பா.ஜ. முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக தற்­போ­தைய முதல்­வர் ரகு­பர் தாஸ் அறி­விக்­கப்­பட்­டுள்­ளார். இந்த மாநில கட்சி பொறுப்­பா­ளர் ஓ.பி.மாத்­தூர், பா.ஜ. மீண்­டும் ஆட்சி அமைக்­கும். மாநில அரசு நிறை­வேற்­றிய திட்­டங்­கள், பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் செல்­வாக்­கால் மீண்­டும் ஆட்சி அமைப்­போம். 65 தொகு­திக்கு மேல் வெற்றி பெறு­வோம் என்று நம்­பிக்­கை­யு­டன் கூறி­யுள்­ளார்.  

ஜார்­கண்­டில் எதிர்­கட்­சி­கள் கூட்­டணி அமைத்­துள்­ளன. பல கட்ட பேச்சு வார்த்­தைக்கு பிறகு, இந்த கூட்­டணி அமைந்­துள்­ளது. ஜார்­கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகு­தி­க­ளி­லும், காங்­கி­ரஸ் 31 தொகு­தி­க­ளி­லும், ராஷ்­டி­ரிய ஜனதா தளம் ஏழு தொகு­தி­க­ளி­லும் போட்­டி­யி­டு­கின்­றன. பா.ஜ.,கூட்­ட­ணி­யைச் சேர்ந்த ஐக்­கிய ஜனதா தளம், லோக்­ஜ­ன­சக்தி, ஜார்­கண்ட் மாண­வர் சங்­கம் ஆகி­யவை தனித்­த­னி­யாக போட்­டி­யி­டு­கின்­றன.    

லோக் ஜன­சக்தி கட்­சி­யின் தலை­வ­ராக சிராக் பஸ்­வான் பத­வி­யேற்ற பிறகு சந்­திக்­கும் முதல் தேர்­தல் பீகா­ரில் இருந்து பிரிந்த ஜார்­கண்ட் மாநில சட்­ட­சபை தேர்­தலே.