ஹாங்காங்கில் தீவிரமடைந்துள்ள போராட்டம்: பள்ளிகள், கல்லூரிகள் மூட அரசு உத்தரவு

பதிவு செய்த நாள் : 14 நவம்பர் 2019 20:52

ஹாங்காங்,

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து பொது போக்குவரத்தை முடக்கியுள்ளதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஹாங்காங்கில் அடுத்த வாரம் வரை பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹாங்காங்கில்  சீன ஆதிக்கத்தை எதிர்த்து கடந்த 6 மாதங்களாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஹாங்காங்கில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும். ஹாங்காங் தலைவர் காரி லாம் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை போராட்டக்காரர்கள் விதித்துள்ளனர்.

ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற போராட்டங்கள் பின்னர் வன்முறையாக மாறியது. போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதல்களில் இதுவரை பலர் காயமடைந்துள்ளனர். கடைகள், வணிக வளாகங்கள், அரசு அலுவகலங்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் முக்கிய சாலைகளை மறித்துள்ளனர். சாலை முழுவதும் செங்கற்களை அடுக்கி, மூங்கிலால் ஆன தடுப்புகளை சாலை குறுக்கே போட்டு போக்குவரத்தை முடக்கியுள்ளனர்.

மேலும் கடந்த 4 நாட்களாக ஹாங்காங்கில் அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதையும் மீறி இன்று பணிக்கு வந்த ஊழியர்களில் சிலர் மதியம் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் பல இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் கலந்துகொள்வதாக அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைகழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களை கலைக்க இன்று காலை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

பல்கலைகழகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது மாணவர்கள் சிலர் கடைகளில் இருந்து திருடி வந்த வில் அம்புகள் மூலம் தாக்குதல் நடத்தினர். டென்னிஸ் பேட் முதல் சுயமாக தயாரித்த கண்ணீர் புகை குண்டுகள் வரை பலவித ஆயுதங்கள் மூலம் மாணவர்கள் போலீசாரை தாக்கியதாக ஹாங்காங் போலீஸ் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

இதுபோன்ற வன்முறை தாக்குதல்களால் போராட்டக்காரர்கள்  பயங்கரவாதத்தை நோக்கி ஒரு அடி முன்வைத்துள்ளதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஹாங்காங்கில் பிரச்சனை தீவிரமடைந்துள்ளதால் அடுத்த வாரம் வரை பள்ளிகள், கல்லூரிகளை மூட ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை

ஹாங்காங்கில் நிலைமை மோசமடைந்துள்ளதால் வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. ஆனால் இதை ஹாங்காங் காவல்துறை மறுத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் உரிமை ஹாங்காங் தலைவர் காரி லாமிற்கு மட்டுமே உண்டு. அதனால் இது பற்றி எந்த காவல்துறை அதிகாரிகளும் கருத்து தெரிவிக்கவில்லை.

ஹாங்காங்கில் போராட்டத்தை ஒடுக்கி மீண்டும் அமைதியை நிலைநாட்டும் திறன் காவல்துறைக்கு உள்ளது. இதை நிறைவேற்ற எந்த புதிய முயற்சிகள் பரிந்துரைக்கப்பட்டாலும் அதை வரவேற்கிறோம்’’ என்று ஹாங்காங் காவல்துறை செய்தி தொடர்பாளர் திசே சுன் –சங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.