தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏக்கள் நாளை பாஜகவில் இணைகிறார்கள் : எடியூரப்பா அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 13 நவம்பர் 2019 19:53

பெங்களூரு,

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் நவம்பர் 14ம் தேதி (நாளை) பாஜகவில் இணைவார்கள் என கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் துணை முதலமைச்சர் சி.என். அஸ்வத்நாராயண் இன்று அறிவித்தனர்.

கடந்த ஆண்டு கர்நாடகத்தில் பதவி ஏற்ற முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கடந்த ஜூலை மாதம் கவிழ்ந்தது.

கூட்டணி ஆட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு பெரும்பான்மை இழந்தது.

அதைத் தொடர்ந்து ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏக்களை முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கர்நாடக எம்.எல்.ஏக்கள் 17 பேரை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதேசமயம் தகுதி நீக்கத்திற்கான காலத்தை நிர்ணயிக்கும் உரிமை சபாநாயகருக்கு இல்லை. எனவே வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் தகுதிநீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் போட்டியிடலாம் என நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை பாஜகவில் சேர்வார்கள் என கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயணன் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் டில்லியில் இன்று பாஜக பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். அவர்கள் பாஜகவில் சேர மூத்த தலைவர்களும் இன்று ஒப்புதல் அளித்ததாக துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன் கூறினார்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்த தகவலை உறுதி செய்தார்.