திருப்பதியை போல் அயோத்தியை பிரபல ஆன்மீக நகரமாக மாற்ற உத்தரபிரதேச அரசு திட்டம்

பதிவு செய்த நாள் : 13 நவம்பர் 2019 18:44

லக்னோ,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பதி போல் அயோத்தியை பிரபல ஆன்மீக நகரமாக மாற்ற உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அயோத்திக்கான தகவல் பிரிவின் துணை இயக்குனர் முரளிதர் சிங் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை ஒன்றை மூன்று மாதங்களில் மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அறக்கட்டளையை அமைக்கும் பணிகளை மத்திய அரசு துவங்கியுள்ளது.

இந்நிலையில் ராமர் கோவில் கட்டப்படுவதை ஒட்டி அயோத்தியை முழுமையாக மேம்படுத்த உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. திருப்பதி போல் அயோத்தியை பிரபல ஆன்மீக நகரமாக உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அயோத்தியில் மேற்கொள்ளவிருக்கும் வளர்ச்சி பணிகள் குறித்து அயோத்தி தகவல் பிரிவின் துணை இயக்குனர் முரளிதர் சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில் :

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளின் வருகையை அதிகரிக்க அயோத்தியில் உள்ள சரயு நதியில் கப்பல் போக்குவரத்து துவங்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுளளது.

அயோத்தியில் விரைவில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், சர்வதேச பேருந்து நிலையம், சர்வதேச விமான நிலையம் ஆகியவை அமைக்கப்படும்.

திருப்பதி போல் அயோத்தி ஒரு பிரபல ஆன்மிக நகரமாக மாற குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் தேவைப்படும்.

வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராம நவமி அன்று அயோத்தி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து முதல் விமானம் பறக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அயோத்தி சர்வதேச விமானநிலையத்தை கட்டுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

சர்வதேச பேருந்து நிலையத்துடன் அயோத்தி ரயில்வே நிலையமும் விரிவாக்கப்படும்.

கூடுதலாக ஃபாசியாபாத்தில் இருந்து அயோத்தி வரை 5 கிலோமிட்டர் தொலைவுக்கு மேம்பாலம் ஒன்று கட்டப்படும்.

அயோத்தியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் 10 தங்கும் விடுதிகளுக்கான பணிகள் வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்படும். இந்த கோவில் நாட்டிலேயே மிகப் பெரிய ஆன்மீக தலமாக இருக்கும். சுமார் 2000 கட்டிட கலைஞர்கள் மற்றும் சிற்ப வல்லுநர்கள் தினந்தோறும் 8 மணி நேரம் உழைத்தால் அடுத்த இரண்டரை ஆண்டுகளிலேயே ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும். கோவிலுக்கான 65 சதவீத தூண்கள் ஏற்கெனவே தயாராக உள்ளன.

ராமர் கோவிலை சுற்றியுள்ள 5 கிலோமிட்டர் நிலம் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி அமைக்கப்படும் அறக்கட்டளையின் பொறுப்பில் இருக்கும்.

கோவிலை சுற்றியுள்ள 77 ஏக்கர் நிலத்தில் பல கோசாலை, பக்தர்கள் தங்குவதற்கான தர்மசாலை, வேதசாலை, பக்தர்கள் ஓய்வெடுக்க 10,000 சமூக ஓய்வுக் கூடம் ஆகியவை அமைக்கப்படும் என முரளிதர் சிங் தெரிவித்தார்.