மாணவர்கள் போராட்டத்தால் கட்டண உயர்வை திரும்ப பெற ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் முடிவு

பதிவு செய்த நாள் : 13 நவம்பர் 2019 17:38

புதுடில்லி,

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஹாஸ்டலுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் கடந்த 16 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவர்களின் தொடர் போராட்டத்தால் கட்டண உயர்வை வாபஸ் பெற ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது.

டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு ஹாஸ்டல் கட்டணம் மிகவும் குறைவு என்பதால் பல மாநிலங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் இங்கு தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பல்கலைகழக நிர்வாகம் திடீரென்று ஹாஸ்டல் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி ஒருவர் தங்கும் அறைக்கான கட்டணம் ரூ. 20ல் இருந்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இருவர் தங்கும் அறைக்கான கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.300 ஆக அதிகரிக்கப்பட்டது.

மேலும் சேவை கட்டணம், குடிநீர், மின்சார கட்டணம் ஆகியவை இதுவரை வசூலிக்கப்படாத நிலையில் தற்போது அவற்றுக்கு ரூ.1700 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடை கட்டுப்பாடுகள், ஹாஸ்டல் நேரத்தில் புதிய கட்டுப்பாடுகள் ஆகியவை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு மற்றும் புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து ஜவஹர்லால் நேரு மாணவர்கள் கடந்த 16 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள் இந்த கட்டண உயர்வால் பல்கலைகழகத்தில் பயிலும் 40 சதவீத ஏழை மாணவர்க்ள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மாணவர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பெண் காவலர்கள் மாணவிகளை சரமாரியாக தள்ளி அப்புறப்படுத்தினர். அதேபோல மாணவர்களுக்கும் - பாதுக்காப்புப் படையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் திங்கள் மாலை, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலை சந்தித்துப் பேசினார்கள். தங்கள் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக மத்திய அமைச்சரிடம் வழங்கினர்.

கட்டண உயர்வு வாபஸ்

இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து பல்கலைகழகத்தின் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடைசி நேரத்தில் கூட்டம் நடைபெறும் இடம் பல்கலைகழகத்தை விட்டு வெளியே வேரொரு இடத்திற்கு மாற்றப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் ஜவஹர்லால் பல்கலைகழக நிர்வாகம் கட்டண உயர்வை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து பல்கலைகழகத்தின் மனிதவளத்துறை செயலாளர் ஆர். சுப்பிரமணியன் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஜே.என்.யூ நிர்வாக கமிட்டி ஹாஸ்டல் கட்டண உயர்வை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. மேலும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் புதிய திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் வகுப்பிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ என பதிவிட்டுள்ளார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் ஏற்க மறுப்பு

பல்கலைகழக நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை மாணவர்கள் அமைப்பு மற்றும் பல்கலைகழக ஆசிரியர்கள் சங்கம் ஏற்க மறுத்துவிட்டது.

ஹாஸ்டல் கட்டண உயர்வு வாபஸ் பெறப்படவில்லை. சில திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அதிகாரப்பூர்வமான விவரம் வெளியாக வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹாஸ்டல் கட்டணம் குறித்து எங்களுடன் அதிகாரிகள் ஆலோசனை செய்யவில்லை. எந்தவித முன்னறிவிப்பின்றி இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. எங்களுடைய கருத்தை கேட்காமல் புதிய திருத்தங்களை மேற்கொண்டால் அதை நாங்கள் நிராகரிப்போம்.  

இந்த விவகாரத்தில் முடிவு தெரியும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என்றும் பல்கலைகழகத்தின் மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.