ராம ஜென்மபூமி -பாபர் மசூதி வழக்கில் நவ.9 சனிக்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2019 09:16

ராம ஜென்மபூமி -பாபர் மசூதி வழக்கில் நவ.9 சனிக்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி

அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி பாபர் மசூதி நில உரிமை மேல்முறையீட்டு வழக்குகளில் நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை காலை பத்து முப்பது மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது,

வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது நீதிமன்றத்தின் அறிவிப்பு உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஓகே சந்திரசூட் அசோக் பூஷண் மற்றும் அப்துல் நசீர் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்தனர் வழக்கு விசாரணை 40 நாட்கள் தொடர்ந்து நடந்தது, கடந்த அக்டோபர் 16ஆம் தேதி  வழக்குகள் விசாரணை  நிறைவடைந்ததை ஒட்டி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது .

ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் சனிக்கிழமை காலை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

ராம ஜென்மபூமி உரிமை தொடர்பான வழக்கு 1950 ம்ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்டது அதைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக பல உரிமை கோரும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன,

இதற்கிடையில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி ராம ஜென்மபூமி பாபர் மசூதி நிலத்தில் இருந்த பாபர் மசூதி இடித்து தகர்க்கப்பட்டது.

 இந்த வழக்குகளில் அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று அமைப்புகள் தங்களுக்குள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14  மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வெளியிடப்படும் நாளையொட்டி அகில இந்திய அளவில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்திலும் மிகவும் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்திற்கு அம்மாநில தலைமைச் செயலாளரும் காவல்துறை தலைவரும் வெள்ளியன்று தகவல் தந்தனர்.