டில்லியில் அங்கீகாரம் பெறாத காலனிவாசிகளுக்கு பட்டா வழங்க புதிய சட்டம்: பிரதமர் மோடி உறுதி

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 20:59

புதுடில்லி,

டில்லியில் அங்கீகாரம் பெறாத காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் குடியிருக்கும் நிலத்திற்கான பட்டா வழங்க புதிய சட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தன்னை சந்திக்க வந்த டில்லி எம்.பிக்கள் மற்றும் காலனிவாசிகளிடம் உறுதி அளித்தார்.

தலைநகர் டில்லியில் அங்கிகாரம் வழங்கப்படாத 1,797 காலனிகளில் சுமார் 40 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தாங்கள் குடியிருக்கும் நிலத்திற்கான உரிமை கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

இவர்களுக்கு நிலத்திற்கு உரிமை வழங்குவதாக பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகரிக்கப்படாத காலனிவாசிகளுக்கு அவர்கள் குடியிருக்கும் நிலத்திற்கான உரிமையை வழங்க வகை செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த மாதம் துவங்கவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் டில்லியின் அங்கீகரிக்கப்படாத காலனிவாசிகள், டில்லியை சேர்ந்த பாஜக எம்.பிக்கள் என 200க்கும் மேற்பட்டோர் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர்.

அங்கீகாரம் பெறாத காலனியில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் குடியிருக்கும் நிலத்திற்கான உரிமம் வழங்க மத்திய அரசு முடிவு செய்ததற்காக பிரதமர் மோடியிடம் நன்றி தெரிவித்தனர்.

அவர்களிடம் நிலத்திற்கான உரிமை வழங்கும் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

மேலும் டில்லி காலனிவாசிகளுக்கு நிலத்திற்கான உரிமையை பெற்று தருவதற்கு மத்திய வீடு மற்றும் நகர்புர விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.

இந்த சந்திப்பு பாஜக டில்லியின் பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிப்பரப்பட்டது.