நாட்டில் பொருளாதார துயரத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கை விரைவுப்படுத்தியது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 20:58

சென்னை,

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நம் நாட்டில் பொருளாதார துயரத்தை விரைவுப்படுத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நவம்பர் 8ம் தேதியான இன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 3ம் ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து தங்கள் கருத்துகளை வெளியிட்டனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் :

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு, குறு தொழில்களை அழித்து, வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி நாட்டில் பொருளாதாரத் துயரத்தை விரைவுப்படுத்தியது. அதனால் தான் இன்று மத்திய அரசு கூட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேசுவதில்லை.

இப்போதாவது நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுவதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்துமா ? என மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.