பட்னாவிஸ் ராஜினாமா: அதிகாரப் பங்கீடு குறித்து பாஜக - சிவசேனை பரஸ்பரம் புகார்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 20:24

மும்பை

மகாராஷ்டிர முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் இன்று ராஜினாமா செய்தார். மாநில ஆளுநர் கோஷியாரிடம் ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.

ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட மாநில ஆளுனர், புதிய அரசு அமையும் வரை மகாராஷ்டிர மாநில காபந்து முதல்வராக பொறுப்பில் இருக்கும்படி பட்னாவிசை கேட்டுக்கொண்டார். மாநில ஆளுநரின் வேண்டுகோளை ஏற்பதாக பட்னாவிஸ் உறுதி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பட்னாவிஸ் பேசினார் தனது பேட்டியில் சிவசேனை தலைவர்களை கடுமையாக்க் குறை கூறினார்.

தேர்தலுக்கு முன்பு நடந்த கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நான் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை எதிலும் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது பற்றி உடன்பாடு எட்டப்படவில்லை.

பாஜக தலைவர் அமித் ஷாவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என எனக்கு தெரியாது.

நான் பேச தொலைபேசியில் முயன்றால் சிவசேனை தலைவர் போனை எடுப்பதே இல்லை. ஆனால் சிவசேனை தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் உடனும் காங்கிரஸ் தலைவர்களுடனும் ஒரு நாளைக்கு மூன்று முறை கூட பேசினார்கள்.

தேர்தலுக்குப் பிறகு நடந்த முதல் செய்தியாளர் கூட்டத்தில் அரசு அமைப்பது குறித்து சிவசேனை தலைவர் தாக்கரே கூறிய கருத்து எனக்கு பெரிதும் வருத்தம் அளித்தது. ”ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை எல்லா வழிமுறைகளையும் பின்பற்றி அரசு அமைக்கலாம்” என்று தாக்கரே கூறியது எனக்கு பெரிதும் வருத்தம் தந்தது.

பிரதமர் மோடியை சிவசேனைத் தலைவர்கள் கடுமையான விமர்சனம் செய்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இப்பொழுது ஒரு உறுதியை உங்களுக்கு நான் வழங்குகிறேன்.. மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த அரசு பாஜக தலைமையில் அமையும்.

இவ்வாறு பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

தாக்கரே பேட்டி

பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசிய சிறிது நேரத்தில் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசினார். பட்னாவிஸ் அளித்த பேட்டியை பார்த்துவிட்டுத்தான் நான் உங்களிடம் பேச முன் வந்திருக்கிறேன். அவரது பேட்டி எனது மனதை பெரிதும் காயப்படுத்தி விட்டது என்று உத்தவ் தாக்கரே தனது பேட்டியை துவங்கினார்.

மோடி என்னிடம் பேசும்பொழுது நான் அவரது இளைய சகோதரன் என்று கூறினார். மோடி என்னை சகோதரர் என்று அழைத்தது சிலருக்கு பொறாமையை கொடுத்திருக்கலாம் .அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தேர்தல் நடந்து முடிந்த பிறகு கூட்டணி பற்றி பேசும்பொழுது முப்பது மாதத்திற்கு ஒரு முறை முதல்வர் பதவியை பாஜகவும் சிவசேனாவும் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறியது உண்மைதான். ஆனால் இப்பொழுது முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை என்று பாஜக கூறினால் அதனை என்னால் புரிந்துகொள்ள முடியும்.

கங்கையை சுத்தம் செய்யப்போய் பாஜக தலைவர்கள் தங்கள் இதயங்களை மாசுபடுத்தி கொண்டு திரும்பியிருக்கிறார்கள்.

பேராசை இந்த அளவுக்கு போகும் என நான் நினைக்கவில்லை. தவறானவர்கள் உடன் இணைந்து செயல்பட்டதற்காக வருத்தப்படுகிறேன். இந்துத்துவா கொள்கையின் ஒரு பகுதியாக பொய் சொல்வது இப்பொழுது மாறிவிட்டது.

காபந்து முதல்வர் தன்னுடைய பேட்டியில் மெஜாரிட்டி இல்லாமலேயே நாம் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறார். இது அதிர்ச்சியளிக்கிறது.

பாஜக செய்தால் குற்றமில்லையா?

 நாங்கள் ஆட்சி அமைப்பது குறித்து மாற்றுத் திட்டங்களை பரிசீலனை செய்தால் அது குற்றம்.

ஆனால் அதே வேலையை பாஜக தலைவர்கள் செய்தால் அது குற்றமில்லையா?

நாங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை சரத்பவாருடன் பேசினோம் என்று காபந்து முதல்வர் பட்னாவிஸ் கூறுகிறார்.

எங்களை அவர்  வேவு பார்க்கிறாரா? எங்களை வேவு பார்க்க துணிந்து விட்ட உங்களுடன் இனிமேல் நாங்கள் பேசப்போவதில்லை.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீங்கள் இன்னும் நிவாரணம் தரவில்லை. தவறுக்கு மேல் தவறு களைச் செய்த செய்யாதீர்கள். பழைய தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

புதுத் தவறுகளை செய்யாமல் தவிர்க்க நடவடிக்கை எடுங்கள் இவ்வாறு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டியளித்தார்.

உத்தவ் தாக்கரேயின் பேட்டியை தொடர்ந்து ரங்க்சாரதா ஹோட்டலில் இருந்து மாத்தீவுக்கு சிவசேனை எம்எல்ஏக்கள் அனைவரும் மாற்றப்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டது.

மும்பை நகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வேயுடன் சிவசேனை நிர்வாகிகள் தொடர்புகொண்டு பேசினார்கள். சிவசேனை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடத்துக்கு செல்கிறார்கள். அவரின் வீடுகளையும் அலுவலகங்களையும் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று மாநகர போலீஸ் ஆணையர் சஞ்சய் பார்வேயிடம் தெரிவிக்கப்பட்டது.

இன்று நள்ளிரவுடன் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதனால் அவர் முன்கூட்டியே முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். தற்பொழுது அவர் காபந்து முதல்வராக பொறுப்பில் இருக்கிறார். இந்த நிலையில் பாஜக அல்லது சிவசேனை அரசு அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உடனடியாக சாத்தியமில்லை. அதனால் ஆளுநர் முன் சில சட்ட பூர்வமான மாற்று வாய்ப்புகள் உள்ளன. பட்னாவிசை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் கேட்டுக்கொள்ளலாம் .அவர் மறுத்தால் சிவசேனை தலைவர்களை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் கேட்டுக்கொள்ளலாம். இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்று ஆளுநர் கருதினால் அடுத்த நடவடிக்கை குறித்து ஆளுநர் பரிசீலனை மேற்கொள்ளலாம்.

முதல்வர் பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கூட்டிய செய்தியாளர்கள் செய்தியாளர்கள் கூட்டம் சிவசேனைக்கு பெரிதும் கோபத்தையும் ஆத்திரத்தையும் தந்துள்ளது. அதிகாரப் பங்கீடு பற்றி சிவசேனை தலைவர்கள் பொய் சொல்வதாக காபந்து முதல்வர் குற்றம் சாட்டுகிறார் என்று தனது பேட்டியில் உத்தவ் தாக்கரே பலமுறை குறிப்பிட்டார், அதனால் அவர் இனிமேல் பட்னாவிஸ் உடன் பேச மாட்டேன் என கூறிவிட்டார்.

அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி பிரமாண நிகழ்ச்சி இன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார் .அவர் மகாராஷ்டிரா அரசின் அனைத்து செயலாளர்களின் கூட்டத்தை இன்று மாலை கூட்டினார். அரசு செயலாளர்கள் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்று கூறப்படவில்லை.