பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிர்க்கட்சிகள் இரண்டு நாள் அவகாசம்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019 19:09

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் பதவியிலிருந்து விலக இம்ரான் கானுக்கு 2 நாள் தருவதாக எதிர்க்கட்சிகளின் சார்பில் பஸ்லூர் ரெஹ்மான் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முறைகேடு செய்து தேர்தலில் வெற்றி பெற்றதால் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வலதுசாரி கட்சியான ஜமையாத் உலிமா இ இஸ்லாம் ஃபாசில் தலைவர் மவுலானா பஸ்லூர் ரெஹ்மான் தலைமையில் எதிர்க்கட்சியினர் இஸ்லாமாபாத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று 8வது நாளாக தொடர்கிறது.

இந்த போராட்டத்தை கைவிடும்படி எதிர்க்கட்சிகளிடம் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெர்வெஸ் கட்டாக் தலைமையிலான குழு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

நேற்றிரவு இஸ்லாமாபாத்தில் போராட்டக்காரர்கள் முன்னிலையில் மவுலானா பஸ்லூர் ரெஹ்மான், பேசுகையில், பிரதமர் இம்ரான் கான் ராஜினாமா செய்ய சம்மதிக்காமல் அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு வரக்கூடாது என அறிவித்தார்.

மேலும் பிரதமர் இம்ரான் கான் தன் பதவியை ராஜினாமா செய்ய மீண்டும் இரண்டு நாள் கெடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் நேற்று இம்ரான் கான் அரசு 14 அவசர சட்டங்களை பிறப்பித்ததற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு நடுவே பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பெர்வெஸ் கட்டாக் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

நீங்கள் அங்கேயே உட்கார்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டிருங்கள். ஆனால் நம் நாட்டுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாதீர்கள். மவுலானா பஸ்லூர் ரெஹ்மானுக்கு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பொழுதுபோக்காக தெரிகிறது. நாங்கள் கூறுவதை கேட்கக்கூட எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என பெர்வெஸ் கட்டாக் குற்றம்சாட்டினார்.

அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஜமையாத் உலிமா இ இஸ்லாம் ஃபாசில் கட்சியினர் தங்கள் முற்றுகை போராட்டம் தொடரும் என எச்சரித்தனர்.

அவர்களை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய முஸ்லிம் லீக் கட்சி தலைவர் குவாஜா ஆசிஃப் இந்த போராட்ட கலாச்சாரத்தை உங்கள் கட்சி (பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப்) தான் முதலில் துவங்கியதாக விமர்சித்தார்.  

மேலும் இவ்வாறு அவசர சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்ந்தால் நாட்டின் ஜனநாயகம் சீர்குலையும் என்று குவாஜா ஆசிஃப் கவலை தெரிவித்தார்.